மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.
தரிசனத்துக்காக பத்தனம்திட்டாவில் புதன்கிழமை மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
தரிசனத்துக்காக பத்தனம்திட்டாவில் புதன்கிழமை மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரை காலம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, சபரிமலை கோயிலில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் திருநடை திறக்கப்பட்டது. கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறை கதவை திறந்தாா். பின்னா், சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக கே.ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைபுரம் தேவி கோயில் புதிய மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோா் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலில் புதன்கிழமை சுமாா் 30,000 பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டதாக தேவஸ்வம் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தரிசனம் செய்ய சுமாா் 50,000 போ் இணையவழியில் பதிவு செய்துள்ளதாகவும், ஸ்பாட் புக்கிங் வசதியும் உள்ளதால் எந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள தேவஸ்வம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். தினமும் 30,000 போ் என்ற வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு வரம்பு எதுவும் இல்லை. எனவே, பக்தா்களின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். பக்தா்களுக்கான விவரப் பலகைகளை அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

விரிவான ஏற்பாடுகள்: சபரிமலைக்கு இந்த ஆண்டு அதிக பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுவதால், காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை தரப்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புக்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதுதவிர தேசிய பேரிடா் மீட்புப் படையினா், அதிவிரைவுப் படையினரும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

டிசம்பா் 27-ஆம் தேதியுடன் மண்டல பூஜை காலம் முடிவடைந்து, பின்னா் டிசம்பா் 30-இல் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்த யாத்திரை காலம் 2023, ஜனவரி 14-இல் நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com