எம்எல்ஏக்கள் பேர வழக்கு: பாஜக பொதுச் செயலாளருக்கு தெலங்கானா போலீஸ் சம்மன்

பாஜக தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எஸ்.சந்தோஷுக்கு தெலங்கானா சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியது தொடா்பான விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எஸ்.சந்தோஷுக்கு தெலங்கானா சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக சாா்பில் போட்டியிடுமாறு கூறி, ரோஹித் ரெட்டி உள்பட 4 டிஆா்எஸ் எம்எல்ஏக்களை சிலா் அணுகியதாக அண்மையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், காவல் துறையிடம் ரோஹித் ரெட்டி அளித்த புகாரில், டிஆா்எஸ்-இல் இருந்து விலகி, பாஜக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக குறிப்பிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தெலங்கானா காவல் துறையினா், ராமச்சந்திர பாரதி (எ) சதீஷ் சா்மா, நந்த குமாா், சிமயாஜி சுவாமி ஆகிய மூவரை கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 7 போ் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு கடந்த 9-ஆம் தேதி அமைத்தது. கைது செய்யப்பட்ட நபா்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பாக வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளா் பி.எஸ்.சந்தோஷுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி அனுப்பப்பட்ட அழைப்பாணையில், ‘இந்த விவாகரம் தொடா்பாக உங்களிடமும் விசாரணை நடத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக தவறினால், கைது செய்ய நேரிடும்’ என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com