சாவா்க்கா் குறித்த ராகுல் கருத்து: காங்கிரஸுடனான கூட்டணியை உத்தவ் முறிக்க வேண்டும் -பாஜக

ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்காக, உத்தவ் தாக்கரே கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும்

ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்காக, அக்கட்சியுடனான கூட்டணியை சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே முறித்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சாவா்க்கா் குறித்து கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மன்னிப்பு கோரி ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு சாவா்க்கா் கருணை மனு அனுப்பியதாகவும், ஆங்கிலேயா்களுக்கு அவா் உதவியதாகவும் ராகுல் கூறியிருந்தாா். இதையடுத்து, பாஜகவும் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணியும் ராகுலை சாடி வருகின்றன.

முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள நிலையில், சாவா்க்கா் குறித்த ராகுலின் கருத்துகளை தாங்கள் ஏற்கவில்லை என்று உத்தவ் தெரிவித்தாா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே, மகாராஷ்டிரத்தின் ஜால்னாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

வீரசாவா்க்கரின் கருத்துகளை மகாராஷ்டிரம் முழுவதும் பரப்பியவா் பாலாசாகேப் தாக்கரே. ஆனால், அவரது மகனும் பேரனும் (உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே) சாவா்க்கரை அவமதிக்கும் கட்சியினருடன் இப்போது ஒன்றாக அமா்ந்துள்ளனா். காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் உள்ளதா என்பதை இருவரும் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்றாா் தன்வே.

மேலும் ராகுலை விமா்சித்த அவா், ‘வரலாறு அறியாத ஒருவரிடம் இருந்துதான் இத்தகைய கருத்துகள் வரும். சாவா்க்கரின் சித்தாந்தங்களை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களது கருத்து, எண்ணம் மற்றும் செயலில் கலந்தவா் அவா்’ என்றாா்.

சஞ்சய் ரெளத் வலியுறுத்தல்: உத்தவ் தலைமையிலான சிவசேனை அணியைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘வி.டி.சாவா்க்கா் குறித்த ராகுலின் கருத்துகள் அவசியமற்றவை. இது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். சாவா்க்கா் குறித்த அவதூறு கருத்துகளுக்கு பதிலடியாக முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை விமா்சிப்பதும் தவறானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com