மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே நடைப்பயணம்: மோடி

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக நடைப்பயணம் மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக நடைப்பயணம் மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தின் சுரேந்திரா நகரில் பாஜக சார்பில் திங்கள்கிழமை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். அவர் மேலும் பேசியதாவது:

தற்போது தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் பேசுவதில்லை. அதற்குப் பதிலாக மோடிக்கு அவரது அந்தஸ்து என்ன என்பதைக் காட்டுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுடைய ஆணவத்தைக் கவனியுங்கள். அவர்கள் (சோனியா காந்தி குடும்பம்) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஒரு சாதாரண சேவகன். எனக்கு அந்தஸ்து ஏதுமில்லை.

கடந்த காலங்களில் என்னை இழிபிறவி, மரண வியாபாரி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி காங்கிரஸ் விமர்சித்தது. இது போன்ற விமர்சனங்களில் இறங்காமல் வளர்ச்சி குறித்துப் பேசுமாறு அவர்களை வலியுறுத்துகிறேன். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கே நான் கவனம் செலுத்துவதால் இது போன்ற அவமானங்களை நான் சகித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் நர்மதா அணைக்கட்டு திட்டத்தை 40 ஆண்டுகளாக முடக்கி குஜராத்தை தாகத்தில் வைத்திருந்தவர்களுடன் (மேதா பட்கர்) இணைந்து நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த நடைப்பயணத்தை மேற்கொள்பவர்களை இந்தத் தேர்தலில் குஜராத் மக்கள் தண்டிப்பார்கள். நர்மதா அணைக்கட்டு திட்டத்தை எதிர்த்தவர்களையும் மக்கள் தண்டிப்பார்கள்.

நடைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு (ராகுல் காந்தி) வேர்க்கடலைக்கும் பருத்திக்கொட்டைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. குஜராத்தில் தயாராகும் உப்பை சாப்பிட்ட பிறகும் சிலர் குஜராத்தை இகழ்கின்றனர். 

நாட்டில் ஒட்டுமொத்தமாக தயாராகும் உப்பில் 80 சதவீதம் குஜராத்தில் தயாராகிறது. உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னைகளில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் கவனம் செலுத்தவில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரûஸ சில இடங்களில் வெற்றி பெறச் செய்து சுரேந்திரநகர் மக்கள் தவறு செய்தனர். அந்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றார்.

இதனிடையே, பழங்குடி இனத்தவர் அதிக அளவில் வசிக்கும் பாரூச் மாவட்டத்தில் உள்ள ஜம்புசார் நகரில் பிரதமர் மோடி பேசியது:
இந்தியாவில் பழங்குடி இனத்தவர் வசிக்கின்றனர் என்பதே நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியவில்லை. கடவுள் ராமர், கிருஷ்ணர் காலத்தில் இருந்தே பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். 1857இல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் அவர்கள் பங்கேற்கவில்லையா? இந்த நாட்டுக்காக பழங்குடி மக்கள் பாடுபட்டுள்ளனர். ஆனால் இது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியவில்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக வந்த பிறகுதான் பழங்குடி இனத்தவருக்கு நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இன்றும் பழங்குடி இனத்தவரின் உடைகளை அணிவதற்காக என்னை காங்கிரஸ் தலைவர்கள் கேலி செய்கின்றனர் என்றார்.

முன்னதாக, பாஜகவின் இளம் தொண்டர் என பாஜக பிரசார பாடலை பாடும் சிறுமியுடன் பிரதமர் மோடி அமர்ந்து பாராட்டும் விடியோவை அக்கட்சி வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com