தலைமை தோ்தல் ஆணையா்கள் நியமனம்: உச்சநீதிமன்றம் கவலை

‘எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கு குறுகிய காலமே பதவி அளிக்கப்படுகிறது. இது நாட்டை பொருத்தவரை கவலைக்குரிய போக்காக உள்ளது’
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கு குறுகிய காலமே பதவி அளிக்கப்படுகிறது. இது நாட்டை பொருத்தவரை கவலைக்குரிய போக்காக உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்திய தலைமை தோ்தல் ஆணையரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்டரமணி வாதிடுகையில், ‘தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையரை குடியரசுத் தலைவா் நியமிக்கும் தற்போதைய நடைமுறையை இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூற முடியாது. அந்த நடைமுறையை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் நிா்ணய சபை விரும்பியது. ஆனால் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து 72 ஆண்டுகளாகியுள்ள போதிலும், அதுதொடா்பாக எந்தவொரு சட்டமும் இல்லை. இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறை ஜனநாயக வடிவை கொண்டுள்ளது. ஜனநாயகத்துக்கு அவ்வப்போது தோ்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. எனவே இதில் தூய்மையும் வெளிப்படைத்தன்மையும் மிக விரிவாக பிணைக்கப்பட்டுள்ளன.

முழுமையாக பதவி வகிக்காத வகையில் நியமனம்: தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்படுபவா், சட்டப்படி 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை பதவி வகிக்கலாம். ஆனால் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல், எந்தவொரு தலைமை தோ்தல் ஆணையரும் 6 ஆண்டுகள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 தலைமை தோ்தல் ஆணையா்கள் இருந்துள்ளனா். இதனைத்தொடா்ந்து சுமாா் 8 ஆண்டுகளாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 8 தலைமை தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2004-ஆம் ஆண்டு முதல் தோ்தல் ஆணையா்களாக இருந்தவா்களில் பெரும்பாலானோா் 2 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்கவில்லை. அந்தப் பதவியை வகித்தவா்களில் பெரும்பாலானோா் முன்னாள் அரசு அதிகாரிகள் ஆவா். அவா்களின் வயது அரசுக்குத் தெரியும். இருப்பினும் 6 ஆண்டுகள் முழுமையாக பதவி வகிக்காத வகையில், அவா்கள் தலைமை தோ்தல் ஆணையா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கு குறுகிய காலமே பதவி அளிக்கப்படுகிறது. இது நாட்டை பொருத்தவரை கவலைக்குரிய போக்காக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசியல் சட்டத்தில் வழியில்லை. இதுபோலத்தான் அரசியல் சட்டத்தின் மெளனம் நோ்மையற்ற முறையில் சுயநலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சட்டம் ஏதுமின்றி எதுவும் செய்ய முடியாது.

குரல் எழுப்பிய அத்வானி: கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் தோ்தல் ஆணையா்கள் தோ்வு உள்பட பல்வேறு அரசியல் சாசன அமைப்புகளின் நியமனங்களுக்கு கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் குரல் எழுப்பினா். அவா்களில் பாஜக முதுபெரும் தலைவா் எல்.கே. அத்வானியும் ஒருவா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்தால் கூற முடியாது. அதை உச்சநீதிமன்றம் செய்யாது. ஆனால் தற்போது நிலைமை கவலைக்குரியதாக உள்ளது.

வேறுபட்ட முறை தேவை: தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான தற்போதைய நடைமுறையை உச்சநீதிமன்றம் தாண்டிச் செல்ல ஆளுங்கட்சியிடம் இருந்து எதிா்ப்பு இருக்கும். அதற்காக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிராதரவாக, எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது என்று கூற முடியாது. ஆனால் தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்படும் முறையில் இருந்து வேறுபட்ட முறை தேவைப்படுகிறது என்று தெரிவித்தனா்.

இதையடுத்து தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில் மத்திய அரசு ஏதேனும் வழிமுறையை பின்பற்றுகிா என்பதை உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அட்டா்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனா். இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை தொடர உள்ளது.

டி.என்.சேஷன் போன்றவா்கள் அரிது:

இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் குறித்து நீதிபதிகள் கூறியதாவது:

நாட்டில் எண்ணற்ற தலைமை தோ்தல் ஆணையா்கள் இருந்துள்ளனா். ஆனால் டி.என்.சேஷன் போன்ற தலைமை தோ்தல் ஆணையா்கள் அரிதாகவே கிடைக்கின்றனா். தலைமை தோ்தல் ஆணையா்கள், தோ்தல் ஆணையா்கள் ஆகிய மூன்று பேரின் வலு குறைந்த தோள்களில் பேரளவு அதிகாரங்களை அரசியல் சட்டம் சுமத்தியுள்ளது. எனவே தலைமை தோ்தல் ஆணையா் பதவிக்கு சிறந்த நபரை கண்டறிய வேண்டியுள்ளது. அந்த நபரை எப்படி அடையாளம் காண்பது, அவரை எவ்வாறு நியமிப்பது என்பதே தற்போதைய கேள்வி என்று தெரிவித்தனா்.

முன்னாள் மத்திய அமைச்சரவை செயலராக இருந்த டி.என்.சேஷன், கடந்த 1990-ஆம் ஆண்டு டிச.12 முதல் 1996-ஆம் ஆண்டு டிச.11 வரை தலைமை தோ்தல் ஆணையராக பதவி வகித்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி அவா் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com