அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது போலீஸாருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது போலீஸாருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான விவகாரத்தில், காவல் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
 தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவரும், அவருடன் தொடர்புடைய சிலரும் புகாருக்கு உள்ளாகினர். இந்த விவகாரம் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
 தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று, அமலாக்கத் துறை தரப்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது.
 அதேவேளையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
 புதிதாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த வேலைவாய்ப்பு விவகாரத்தில் தொடர்புடைய ஒய்.பாலாஜி, பிரித்விராஜன்ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, எஸ்.ரவீந்திரபட் ஆகியோர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மனுதாரர் பிரித்விராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில், "காலிப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, நேர்காணல் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. தகுதியான நபர்களை தடுக்கும் வகையில் அவர்களின் நேர்காணலுக்கான மதிப்பெண்களை குறைத்ததன் மூலம், தகுதியில்லா நபர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்க லஞ்சம் பெறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை புதிதாக விசாரிப்பதற்கு போலீஸாருக்கு உத்தரவிட்டிருப்பது விநோதமாக உள்ளது' என்றார்.
 அப்போது, கேவியட் மனுதாரர் தேவசகாயம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி குறுக்கிட்டு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது எனக் கூறினார்.
 அப்போது, நீதிபதிகள் அமர்வு கூறுகையில், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். மனு மீதான இறுதி விசாரணைக்காக இந்த விவகாரம் ஜனவரி 10-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை பிற வழக்குரைஞர்கள் ஒருங்கிணைப்புடன் மனுதாரர் தரப்பில் தொகுத்து நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com