'இளங்கலை அறிவியல் படிப்புகளில் 4000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன' - காரணம் என்ன?

கேரளத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் அதிக சேராததால் 4000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
'இளங்கலை அறிவியல் படிப்புகளில் 4000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன' - காரணம் என்ன?


திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் அதிக சேராததால் 4000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவியல் பாடங்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்து வருவதாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்படும் இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய படிப்புகளுக்கான மோசமான வேலை வாய்ப்புகளும், மாநிலத்திற்கு வெளியே நிலவும் சிறந்த கல்விச் சூழலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மாற்றுத் திட்டங்களைத் தேடுவதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களே மாணவ, மாணவிகளின் விருப்பமான பாடங்களாக இருந்தது. சமீப காலமாக கலை அறிவியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்ததுடன் தற்போது உடனடி வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்பு எதுவோ அதன் மீது மாணவ, மாணவிகளின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் கேரள பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 4,000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுபோன்ற படிப்புகளுக்கான சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களையும் கணக்கிட்டால், நிரப்பப்படாமல் உள்ள இடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். கல்லூரி அளவில் உடனடி சேர்க்கை நடத்தப்பட்டாலும், பெரும்பாலான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.

இதுகுறித்து கேரளம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜெயகிருஷ்ணன் கூறுகையில், இளங்கலை மட்டத்திலான வேலை சார்ந்த படிப்புகளுக்காகவே பெரிய அளவிலான மாணவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்று கூறினார். 

சென்னை ஐஐடியின் முன்னாள் ஆசிரியரான ஜெயகிருஷ்ணன் கூறுகையில், "படிப்புகளை முடித்தல், தேர்வுகளை நடத்துதல் மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை வெளியிடுதல் மற்றும் மாநிலத்திற்கு வெளியே உள்ள வளாகங்களில் சிறந்த வசதிகள் போன்றவையே மாணவர்களின் இந்த வெளியேற்றத்திற்கு காரணம்" என்று கூறினார்.

மேலும், இதில் பெரும் செலவுகள் இருந்தாலும், வளர்ந்த நாடுகளில் சிறந்த வேலை வாய்ப்புகள் இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ள வளாகங்களுக்கு அனுப்பத் தயாராக உள்ளனர். “மேலும், மாணவர்கள் வேலை சார்ந்த தொழில்முறை படிப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். கேரளத்தில் இயற்பியல் அல்லது கணிதத்தில் பி.எஸ்சி படிப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை, ஆனால், எழுத்தர் பணிகளுக்கான தேர்வில் கலந்துகொள்வதற்கு மட்டுமே பி.எஸ்சி படிப்பு அவர்களைத் தகுதிபெறச் செய்யும் என்பது அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்”என்று கூறினார்.

இதற்கிடையே, மாநிலத்திற்கு வெளியே கல்வியைத் தேடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொற்றுநோய்க்குப் பிறகு பயணத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்வும் ஒரு காரணம். ஆர்.வி.ஜி. மேனன் போன்ற கல்வியாளர்கள், படிப்பை விட, சிறந்த கற்றல் சூழல் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவையே மாநிலத்திற்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை பயணிக்கத் தூண்டுகிறது என்று கருதுகின்றனர்.

“இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கு, மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால், அவர்களுக்குச் சாதகமாகச் செல்வது, நமது மாநிலம் வழங்காத ஒரு உகந்த கல்விச் சூழல், உள்கட்டமைப்பாகும்,” என்று மேனன் கருத்து தெரிவித்தார். 

சேவ் யுனிவர்சிட்டி பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சசிகுமார் கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் சில புதிய தலைமுறை படிப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டும் நிலைமையை மேம்படுத்த அவை உதவவில்லை. காரணம் படிப்பை தொடர்வதில் உள்ள நிச்சயமற்ற தன்மை, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கவலைகள் ஆகியவை மாணவர்களை இதுபோன்ற படிப்புகளில் இருந்து விலகி செல்ல வைக்கின்றன,” என்றார். 

'தனிப்பட்ட விருப்பத்தின் விஷயம்'
உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், அறிவியலில் இருந்து பயன்பாட்டு அறிவியல் படிப்புகள் அல்லது மனிதநேயப் பாடங்களுக்கு மாறுவது கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படும் ஒரு போக்கு. "இது எந்த வகையிலும் நமது மாநிலத்தில் வழங்கப்படும் பாரம்பரிய அறிவியல் படிப்புகளின் தரத்தின் பிரதிபலிப்பு அல்ல, ஆனால், தனிப்பட்ட விருப்பம்" என்று தெரிவித்தார். 

மேலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வெளியேறுவதை ஒப்புக்கொண்ட பிந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அத்தகைய நிறுவனங்களில் படிக்கும் படிப்புகளின் தரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என எச்சரித்தார். வேலைவாய்ப்பு நிலைகளுரக்கு ஏற்ப புதிய தலைமுறை படிப்புகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

இளங்கலை அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாதது கேரள கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com