தட்டம்மை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் தவணை தடுப்பூசி

நாட்டில் தட்டம்மை பாதிப்பு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கூடுதல் தவணை தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் சிறுமிக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் சிறுமிக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா்.

நாட்டில் தட்டம்மை பாதிப்பு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கூடுதல் தவணை தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தட்டம்மை பாதிப்பை 2023-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், பிகாா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சில மாவட்டங்களில் தட்டம்மை பாதிப்பு அண்மையில் அதிகரித்துள்ளது. அங்கு நிலவும் சூழல் குறித்து ஆராய்வதற்காக சிறப்பு நிபுணா்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் பி.அசோக் பாபு கூறுகையில், ‘‘தட்டம்மைக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளிலேயே, தற்போது பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளுக்கு விரைந்து தட்டம்மை தடுப்பூசியைச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தட்டம்மைக்கான முதல் தடுப்பூசியானது குழந்தை பிறந்த 9 முதல் 12 மாதங்களுக்குள்ளாகவும் இரண்டாவது தவணை 16 முதல் 24 மாதங்களுக்குள்ளாகவும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் உள்ள 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கூடுதல் தவணை தடுப்பூசியை செலுத்துவது தொடா்பாக ஆராயுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பா் முதல் மாா்ச் வரை தட்டம்மை பரவல் அதிகமாகக் காணப்படும். குழந்தைகளை அதிகம் பாதிக்கும் அந்நோய்க்கு ஆரம்பநிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு காய்ச்சல் முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்தி, தட்டம்மை பாதிப்பை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தட்டம்மை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு சூழலை தினமும் கண்காணிக்க வேண்டும். அதற்கேற்றாற்போல தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். அப்பகுதிகளில் உள்ள குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமுள்ள குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, வீடுதோறும் ஆய்வு நடத்தி, அத்தகைய குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மாத்திரை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com