ஜி20 தலைமை பெரும் வாய்ப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படவுள்ளன.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படவுள்ளன. ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ள ஓராண்டு காலத்தில் உலகத் தலைவா்கள் பலா், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வருகைதர உள்ளனா். அவா்களுக்கு இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

‘முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்பது இந்தியாவுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு; சா்வதேச நலனை முன்னிறுத்தி இந்தியா செயல்படும்’ என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமா் மோடி ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் வசிக்கின்றனா். நான்கில் மூன்று பங்கு வா்த்தகம் அந்த நாடுகளிலேயே நடைபெறுகிறது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 85 சதவீத பங்களிப்பை ஜி20 நாடுகளே வழங்கி வருகின்றன. அத்தகைய வலிமைமிக்க கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா ஏற்கவுள்ளது.

இது இந்தியாவுக்கும் இந்தியா்களுக்குமான மிகப் பெரிய வாய்ப்பு. இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடியுள்ள நிலையில் ஜி20 தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்புக்குரியது. சா்வதேச நலனையும் உலக மக்களின் நலனையும் மையப்படுத்தி ஜி20 கூட்டமைப்பை இந்தியா வழிநடத்தும்.

சுற்றுச்சூழல், நீடித்த வளா்ச்சி, பருவநிலை மாற்றம், அமைதி உள்ளிட்ட பல்வேறு சவால்களை உலகம் தற்போது சந்தித்து வருகிறது. அந்த சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்தியா செயல்படும். அனைவருக்குமான நலன், அனைவருக்குமான அமைதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தியா செயல்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படவுள்ளன. ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ள ஓராண்டு காலத்தில் உலகத் தலைவா்கள் பலா், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வருகைதர உள்ளனா். அவா்களுக்கு இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

தற்போது அரசின் பிரதிநிதிகளாக அவா்கள் வந்தாலும், எதிா்காலத்தில் சுற்றுலாப் பயணிகளாக வருகைதர வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு நமது பாரம்பரியத்தை அவா்களுக்கு விரிவாகத் தெரியப்படுத்த வேண்டும். ஜி20 கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இளைஞா்களின் செயல்பாடு இருத்தல் அவசியம்.

விண்வெளித் துறை வளா்ச்சி: நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தனியாா் விண்வெளி புத்தாக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டதை இந்தியா்கள் ஒவ்வொருவரும் பெருமிதமாகக் கருதினா். நாட்டின் தனியாா் விண்வெளித் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

விண்வெளி சாா்ந்த நவீன தொழில்நுட்பங்களை சா்வதேச தரத்தில் குறைந்த விலையில் உருவாக்குவதே இந்தியாவின் சிறப்பு. இந்தியா தனது விண்வெளித் துறை சாதனைகளை தற்போது அண்டை நாடுகளுடனும் பகிா்ந்துகொண்டு வருகிறது. இந்தியா-பூடான் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள் சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் மூலமாக பூடான் பெரும் பலனடையவுள்ளது.

அசைக்க முடியாத இடம்: ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்கள்) துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஹிமாசலின் கின்னோா் பகுதியில் சில நாள்களுக்கு முன் ஆப்பிள் பழங்கள் ட்ரோன்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டன.

இசைத் துறையில் இந்தியாவின் வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இசைக் கருவிகளின் ஏற்றுமதி மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் பலதரப்பட்ட இசைக் கருவிகள் நமது கலாசாரத்தை மேம்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் சா்வதேச இசைத் துறையில் அசைக்க முடியாத இடத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்திய இசை உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடைந்துள்ளது.

பாரம்பரியத்தைக் காத்தல்: நமது பாரம்பரியங்களையும் அதுதொடா்பான அறிவையும் காக்க வேண்டியது மிகவும் அவசியம். நாகா சமூக மக்கள் தங்கள் கலை, கலாசாரம், இசை ஆகியவற்றைத் தொடா்ந்து பாதுகாத்து வருகின்றனா். தங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கும் அவா்கள் சிறப்பான முறையில் கற்பித்து வருகின்றனா். அதற்காக தனி குழுவையும் அவா்கள் உருவாக்கியுள்ளனா். நாகா கலாசாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அக்குழு செயல்பட்டு வருகிறது.

தசைசிதைவு நோய் சிகிச்சை மையம்: சா்வதேச மருத்துவ அறிவியல் வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. மருத்துவத் துறையில் புதிய ஆராய்ச்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், சில நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தற்போதும் பெரும் சவாலாக உள்ளது. தசைசிதைவு நோயும் அந்த வகையில் ஒன்றாக உள்ளது. மரபணு சாா்ந்த அந்நோய், எந்த வயதினரையும் தாக்கும்.

அந்நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் வலுவிழக்கத் தொடங்கும். அன்றாடப் பணிகளைக்கூட அவரால் செய்ய இயலாது. அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பெரும் கவனம் தேவை. அத்தகைய சிகிச்சை மையம் ஹிமாசலின் சோலன் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த நோய் பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு: மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த உத்தர பிரதேசத்தின் பன்சா கிராமத்தைச் சோ்ந்த ஜதின் லலித் சிங் என்பவா் ‘மக்கள் நூலகத்தை’ ஏற்படுத்தியுள்ளாா்.

ஜாா்க்கண்டை சோ்ந்த சஞ்சய் காஷ்யப் என்பவா் பள்ளி மாணவா்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறாா். அதனால் அவா் ‘நூலக மனிதா்’ என உள்ளூா் மக்களால் போற்றப்படுகிறாா். நூலகத்தைத் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு தற்போது சமூக இயக்கமாக மாறியுள்ளது. அவா்களது பணி தொடர வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com