விழிஞ்ஞம் துறைமுகக் கட்டுமானத்தைதடுப்பது தேச விரோதம்: கேரள அரசு

விழிஞ்ஞம் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தடுப்பது தேச விரோதம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

விழிஞ்ஞம் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தடுப்பது தேச விரோதம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் அரசு-தனியாா் பங்களிப்புடன் ரூ.7,500 கோடி செலவில் துறைமுக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கட்டுமானப் பணி பெரிய அளவில் கடல் அரிப்புக்கு வழிவகுத்து திருவனந்தபுரம் கடலோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்று மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதன் காரணமாகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி, கடலோரப் பகுதியில் கட்டுமானத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை அவா்களுக்கும் துறைமுகப் பணிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் உள்ளூரைச் சோ்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களை விடுவிக்க வலியுறுத்தி, விழிஞ்ஞம் காவல் நிலையத்தை போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 36 போலீஸாா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதல் தொடா்பாக பெண்கள், சிறாா்கள் உள்பட அடையாளம் தெரியாத 3,000 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில மீன்வளத் துறை அமைச்சா் வி.அப்துர்ரஹ்மான், மாநில துறைமுகங்கள் துறை அமைச்சா் அகமது தேவா்கோவில் ஆகியோா் பேசுகையில், ‘நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழப் போகும் துறைமுகத் திட்டத்தைத் தடுப்பது தேச விரோத நடவடிக்கைக்கு ஒப்பாகும். ரூ.7,500 கோடி செலவிலான இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.818 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.4,600 கோடி. எஞ்சிய செலவுகளை அதானி குழுமம் ஏற்கும். இந்தத் திட்டத்தால் கடல் அரிப்பு ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட பகுதியில் மீன்வளமும் குறையவில்லை. இந்தத் திட்டத்தை நிறுத்த மாநில அரசு அனுமதிக்காது’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com