கொலீஜியம் தொடா்பாக அமைச்சா் ரிஜிஜுகூறியதே மத்திய அமைச்சரவையின் கருத்தா?: வீரப்ப மொய்லி

கொலீஜியம் முறை தொடா்பாக சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதே மத்திய அமைச்சரவையின் கருத்தா என்று முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சா் வீரப்ப மொய்லி கேள்வி எழுப்பியுள்ளாா்.
கொலீஜியம் தொடா்பாக அமைச்சா் ரிஜிஜுகூறியதே மத்திய அமைச்சரவையின் கருத்தா?: வீரப்ப மொய்லி

கொலீஜியம் முறை தொடா்பாக சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதே மத்திய அமைச்சரவையின் கருத்தா என்று முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சா் வீரப்ப மொய்லி கேள்வி எழுப்பியுள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘நீதிபதிகள் பணியிடத்துக்குப் பரிந்துரைகள் வழங்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் முறை இந்திய அரசியல் சட்டத்துக்கு அந்நியமாக உள்ளது. அந்தப் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதாக எவரும் சொல்லக் கூடாது. அப்படி நீதித்துறையினா் கூற விரும்பினால், அவா்களே நீதிபதிகளை நியமித்து, அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கட்டும். கொலீஜியம் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக ஏற்று அரசு கையொப்பமிட வேண்டும் என்று நீதிபதிகள் எதிா்பாா்த்தால், அதில் அரசுக்கு என்ன பங்கு உள்ளது’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில் நீதிபதிகள் நியமனம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிரண் ரிஜிஜுவின் கருத்துகளை வழக்குரைஞா் விகாஸ் சிங் சுட்டிக்காட்டினாா். அதனைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிபதிகளை நீதித்துறையே நியமித்துக் கொள்ளட்டும் என்று உயா் பதவியில் இருக்கும் ஒருவா் கூறினால், அதை நாங்களே செய்து கொள்கிறோம்’ என்று காட்டமாக மறுமொழி கூறினா்.

இதுதொடா்பாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கொலீஜியம் முறை தொடா்பாக அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறிய விசித்திரமான கருத்துகள் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானவை. இதுபோன்ற சவாலை உச்சநீதிமன்றத்துக்கு சட்ட அமைச்சா் விடுப்பது பொருத்தமற்றது.

அவரின் கருத்துகள் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் மறுமொழி, நீதித்துறையின் சுதந்திரம் குறித்து சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் விழிப்படைய வைப்பதாக உள்ளது. நீண்ட காலமாக செயல்படும் கொலீஜியம் முறை, சிறப்பாக செயல்படுவதை மெய்ப்பித்துள்ளது.

சட்ட விவகாரத்தில் எந்தவொரு சட்ட அமைச்சரும் தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க முடியாது. மிக முக்கியமான இந்த விவகாரத்தில், ரிஜிஜுவின் கருத்துதான் மத்திய அமைச்சரவையின் கருத்தா என்பது குறித்து பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com