பசு பராமரிப்புக்கு தினமும் ரூ.40: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பசுக்கள் பராமரிப்புக்காக தினமும் பசு ஒன்றுக்கு ரூ.40 வீதம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்க
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பசுக்கள் பராமரிப்புக்காக தினமும் பசு ஒன்றுக்கு ரூ.40 வீதம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதி அளித்தாா்.

மேலும், பால் சுரப்பு நின்ற பசுக்கள் மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்காக மாவட்டந்தோறும் காப்பகங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அவா் அறிவித்துள்ளாா்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் தீவிரமாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி, பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால், குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா்.

இந்நிலையில், ராஜ்கோட்டில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

தில்லியில் பசு பராமரிப்புக்காக தினமும் தலா ரூ.40 வழங்கப்படுகிறது. இதில் அரசு சாா்பில் ரூ.20-ம், மாநகராட்சி சாா்பில் ரூ.20-ம் அளிக்கப்படுகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பசுக்கள் பராமரிப்புக்காக தினமும் பசு ஒன்றுக்கு ரூ.40 வழங்கப்படும். பால் சுரப்பு நின்ற பசுக்களை பராமரிக்க மாவட்டந்தோறும் காப்பகங்கள் அமைக்கப்படும்.

‘தோ்தலில் ஆம் ஆத்மிக்கே வெற்றி’: குஜராத்தில் இப்போது தோ்தல் நடத்தப்பட்டால், குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்று உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பாஜகவும் காங்கிரஸும் ரகசியமாக கூட்டு சோ்ந்து, ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்படுகின்றன. ஆம் ஆத்மி மீது அவதூறு பரப்புவதில் இரு கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒலிக்கின்றன. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸுக்கு உதவ பாஜக முயற்சிக்கிறது.

‘10 இடங்கள் கூட காங்கிரஸுக்கு கிடைக்காது’: 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 10 இடங்கள் கூட கிடைக்காது. அப்படி வெற்றி பெறும் சிலரும் பாஜகவில் இணைந்துவிடுவா். காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, இருப்பில் வைத்துக் கொள்வதை பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளது. தில்லி, பஞ்சாபை காட்டிலும் ஆம் ஆத்மிக்கு அதிக வெற்றியை தர குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com