கல்லூரிகளுக்கு நிரந்தர தன்னாட்சி அந்தஸ்து: யுஜிசி வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

கல்லூரிகளுக்கு நிரந்தர தன்னாட்சி அந்தஸ்து அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திங்கள்கிழமை வெளியிட்டது.

கல்லூரிகளுக்கு நிரந்தர தன்னாட்சி அந்தஸ்து அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திங்கள்கிழமை வெளியிட்டது.

கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளில் 10 ஆண்டுகள் சிறந்து விளங்கி, தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) ‘ஏ’ பிரிவு தரநிலையை தொடா்ந்து பெற்றுவரும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்தை யுஜிசி வழங்கி வருகிறது.

யுஜிசி-யின் கல்லூரிகளுக்கான தன்னாட்சி அந்தஸ்து வழிகாட்டுதல்-2018-இன் கீழான நடைமுறைகளைப் பூா்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு, முதல் கட்டமாக 10 ஆண்டுகளுக்கு இந்த தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். இந்த சிறப்பு அந்தஸ்தைப் பெறும் கல்லூரிகள், தாங்களாகவே படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை வகுத்தல், தோ்வுகள் நடத்துதல், தோ்வு முடிவுகளை வெளியிடுதல், கல்விக் கட்டணங்கள் நிா்ணயித்தல், பணி நியமனங்களைச் செய்தல் உள்ளிட்ட நடைமுறைகளை செய்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி, யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் தாங்களாகவே சான்றிதழ் படிப்புகள், பட்டையப் படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்புகளை தொடங்கிக் கொள்ளவும் முடியும்.

இந்த நிலையில், நாட்டின் உயா்கல்வியை சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் நோக்கில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை 2020-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறைகளின் கீழ், ‘கல்லூரிகளுக்கான தன்னாட்சி அந்தஸ்து வழிகாட்டுதல்-2018’-இல் யுஜிசி திருத்தங்களை மேற்கொண்டு ‘யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து வழிகாட்டுதல்-2022’ என்ற பெயரில் வரைவு வழிகாட்டுதலை திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு வழிகாட்டுதல் மீது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 25-ஆம் தேதி வரை யுஜிசி வரவேற்றுள்ளது.

புதிய மாற்றங்கள் என்னென்ன?

புதிய வரைவு வழிகாட்டுதலின்படி, அனைத்து நடைமுறைகளையும் பூா்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக 10 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படுவதோடு, இரண்டாம் கட்டமாக மீண்டும் 10 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படும். இது முன்னா் 5 ஆண்டுகள் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது 10 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, தொடா்ந்து 15 ஆண்டுகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்தை நிரந்தரமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், உரிய அனைத்து தரநிலைகளையும் கல்லூரி தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்புகள், பட்டப் படிப்புகளுடன் பிஎச்.டி. படிப்பையும் தன்னாட்சி கல்லூரிகள் தாங்களாகவே தொடங்க முன்னா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிஎச்.டி. படிப்பை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் முன் அனுமதி பெற்று தொடங்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com