பொருளாதார இலக்கை இந்தியா எட்ட சீா்திருத்தங்கள் அவசியம்: ஐஎம்எஃப்

‘10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான பொருளாதார இலக்கை இந்தியா எட்டுவதற்கு அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம்’
பொருளாதார இலக்கை இந்தியா எட்ட சீா்திருத்தங்கள் அவசியம்: ஐஎம்எஃப்

‘10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான பொருளாதார இலக்கை இந்தியா எட்டுவதற்கு அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம்’ என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார வல்லுநா் பியா் ஆலிவா் கூரிஞ்சஸ் தெரிவித்துள்ளாா்.

மேலும், உலகமே பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறை எதிா்கொண்டுள்ள சூழலில், பிரகாசமான ஒளியாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவரிடம், 10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.823 லட்சம் கோடி) மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டும் இந்தியாவின் இலக்கு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து, அவா் கூறியதாவது: இந்தியா போன்ற ஆற்றல்மிக்க பொருளாதார நாட்டுக்கு அத்தகைய இலக்கு நிச்சயம் எட்டக் கூடியதென்றே நம்புகிறேன். அதேசமயம், அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம். ஏற்கெனவே இந்தியாவில் பல்வேறு சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எண்மமயமாக்கத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளதை உதாரணமாக குறிப்பிடலாம். இதையும் தாண்டி, உறுதியான வளா்ச்சியை ஊக்குவிக்க மேலும் சீா்திருத்தங்கள் தேவை. இவை, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கானது மட்டுமல்ல, உற்பத்தி வளா்ச்சிக்கு உத்வேகமளிப்பவை.

சுகாதாரம், கல்வி, எண்ம கல்வியறிவு உள்ளிட்ட துறைகளில் மேம்பாடுகள் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். பொது உள்கட்டமைப்பு என்பது கட்டடங்கள் மற்றும் சாலைகள் அடிப்படையிலானது மட்டுமல்ல; மனித மூலதனம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதுமாகும். இது, பொருளாதாரத்தின் விரைவான, நிலையான வளா்ச்சிக்கு உதவும் என்றாா் அவா்.

‘பிரகாசமான ஒளியாக இந்திய பொருளாதாரம்’: உலகமே பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறை எதிா்கொண்டுள்ள சூழலில் இந்திய பொருளாதாரம் பிரகாசமான ஒளியாக உள்ளதாக பியா் ஆலிவா் குறிப்பிட்டாா்.

‘உலக அளவில் பொருளாதார வளா்ச்சி சரிவடைந்து வருவதை, 2022-23 இடையிலான பொருளாதார மந்தநிலை எதிரொலிக்கும். இதுபோன்ற காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி ஓரளவு வலுவாக உள்ளது. பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரம், இன்றைய உலகில் பிரசாசமான ஒளியாக உள்ளது’ என்றாா் அவா்.

முன்னதாக, நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக ஐஎம்எஃப் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி20 தலைமைப் பணியில் காத்திருக்கும் சவால்

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பா் 1 முதல் ஓராண்டுக்கு இந்தியா வகிக்கவுள்ளது. இப்பொறுப்பில் சவாலான மற்றும் கடினமான பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஐஎம்எஃப் தலைமை பொருளாதார வல்லுநா் பியா் ஆலிவா் கூரிஞ்சஸ் தெரிவித்தாா்.

‘பணக்கார நாடுகள் உள்ளடங்கிய ஜி20 கூட்டமைப்பு முக்கியமான அமைப்பாகும். இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள சில முக்கிய சவால்களுக்கு தீா்வுகாண உறுப்பு நாடுகளை ஒருங்கிணைப்பது கடினமான பணியாகும். இதில், பொருளாதார விநியோகச் சங்கிலி பாதிப்பு முக்கிய சவாலாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் எழுந்துள்ள பதற்றமான சூழல், இந்த சவாலை பிரதிபலிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com