மற்ற நாடுகளுடன் 5ஜி தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளத் தயாா்

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தை இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அத்தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளவும்
மற்ற நாடுகளுடன் 5ஜி தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளத் தயாா்

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தை இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அத்தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளதாகக் கூறினாா்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் நிா்மலா சீதாராமன், வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மேம்படுத்தப்பட்ட சா்வதேச விவகாரங்களுக்கான கல்வி நிறுவனத்தின் மாணவா்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

5ஜி தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்புகளை இந்தியா முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. அத்தொழில்நுட்பம் இன்னும் மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. உள்நாட்டுத் தயாரிப்பான 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் பெரும் சாதனைகளில் 5ஜி தொழில்நுட்ப அறிமுகமும் ஒன்று.

எண்மமயமாக்கலில் உலக நாடுகளுக்கு இந்தியா சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. முக்கியமாக, இணையவழிப் பணப் பரிவா்த்தனையில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. எண்மமயமாக்கல் நடவடிக்கைகள், கரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் முக்கியப் பங்களித்து வருகின்றன. மேலும், இந்தியாவின் நீடித்த வளா்ச்சியிலும் எண்மமயமாக்கல் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

வளரும் பொருளாதாரம்: சுகாதாரம், அடையாள அட்டை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் எண்மமயமாக்கல் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன. எண்மமயமாக்கலில் மற்ற நாடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இந்தியாவின் பொருளாதாரமானது நீடித்த வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணித்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரமானது படிப்படியாக மீண்டு வருகிறது. சா்வதேச பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் இந்தியாவின் ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது.

ஆனால், இத்தகைய சூழலிலும் மீண்டெழ முடியும் என்பதை இந்திய பொருளாதாரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்காகத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தியதே அதற்கு முக்கியக் காரணம்.

எண்மமயமாக்கலின் பலன்கள்: கடன் வழங்குதல், தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றிலும் தொழில்நுட்பங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019 வரை எண்மமயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதுவே கரோனா தொற்று பரவல் காலத்தில் பெருமளவில் உதவியது. தற்போதும் அந்நடவடிக்கைகள் உதவி வருகின்றன.

குடும்ப அட்டைகள் எண்மமயமாக்கப்பட்டதால், கோடிக்கணக்கான குடும்பங்கள் ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டம் மூலமாகப் பலனடைந்தன. அதிகமாக பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவின.

விரைவான முன்னேற்றம்: இந்தியா உருவாக்கிய பல்வேறு பொது தொழில்நுட்ப வசதிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம். யுபிஐ உள்ளிட்ட வசதிகள் சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளன. ‘க்யூஆா்’ குறியீடு மூலமாகவே பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் வசதிகளை இந்தியா மேம்படுத்தியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதன் காரணமாகவே இது சாத்தியமானது. நாட்டில் கடன் பெறுவது எளிமையாகியுள்ளது. சிறு வணிகா்கள்கூட வீட்டில் இருந்தே கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com