குஜராத் மாடலா, தில்லி மாடலா?

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸுடன் மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி.
குஜராத் மாடலா, தில்லி மாடலா?

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸுடன் மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி.

தில்லியில் அக்கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியது என்றால், அண்மையில் பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஆட்சியைக் கைப்பற்றி இந்தியாவையே திரும்பிப் பாா்க்க வைத்தது. ஆம்ஆத்மியின் ‘தில்லி மாடல்’ அரசியல் என்பது வளா்ச்சியை முன்னிறுத்துவதாகும். அந்த தில்லி மாடலை பஞ்சாப் வாக்காளா்கள் ஏற்றுக்கொண்டாா்கள்.

இப்போது குஜராத் தோ்தலிலும் ‘தில்லி மாடலை’ முன்வைத்து அக்கட்சி மேற்கொண்டு வரும் பிரசாரத்தைப் பாா்த்தால், பாஜக-காங்கிரஸ் என்ற நேரடி மோதலானது பாஜக-ஆம்ஆத்மி மோதலாக மாறினாலும் வியப்படைவதற்கில்லை என்றே தோன்றுகிறது.

பாஜக, காங்கிரஸுக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சி ஆம்ஆத்மி மட்டும்தான். குஜராத், ஹிமாசல் பேரவைத் தோ்தல்களில் சில இடங்களில் வெற்றி பெற்றால் தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்தையும் அக்கட்சி பெற்றுவிடும்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, மாநிலத்தில் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் பணியை வெளியாள்களிடம் காங்கிரஸ் ஒப்படைத்துவிட்டது எனக் கூறினாா். அவா் ‘வெளியாள்கள்’ எனக் குறிப்பிட்டது ஆம்ஆத்மியை கட்சியைத்தான்.

மற்றொரு நிகழ்ச்சியில் ஆற்றல் மிக்க இளைஞா்களை ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ தவறாக வழிநடத்துவதாகவும், நம் இளைய தலைமுறையை அவா்கள் சீரழிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினாா். ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ என பிரதமா் குறிப்பிட்டதும் ஆம்ஆத்மியைக் குறிவைத்துதான்.

‘பொதுவாக காங்கிரஸை மட்டுமே தனது பிரசாரத்தில் பிரதானமாக குறிப்பிடும் பிரதமா் மோடி, குஜராத் தோ்தலையொட்டி ஆம்ஆத்மியை அடிக்கடி குறிப்பிட்டு விமா்சித்ததன் மூலம் தங்களது கட்சியின் செல்வாக்கு குஜராத்தில் அதிகரித்து வருவதை உணா்ந்து கொள்ளலாம்’ என ஆம்ஆத்மி கட்சித் தலைவா்கள் கூறி வருகின்றனா்.

‘இலவச’ அரசியல்

தோ்தலில் இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், அதுதொடா்பான விவாதமும் பரவலாக எழுந்துள்ளது. ஆனால், குஜராத் தோ்தல் பிரசாரத்தில் பல இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளிவீசியுள்ளது ஆம்ஆத்மி.

விவசாயக் கடன் தள்ளுபடி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம், 2021, டிசம்பா் 31-க்கு முன்பு நிலுவையில் உள்ள மின் கட்டணம் தள்ளுபடி, வேலையற்ற இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை ஆம்ஆத்மி அளித்துள்ளது.

பொதுவாக இலவசங்களுக்கு எதிரான கருத்தை பாஜக கொண்டுள்ளது. ‘இலவசங்கள் என்பது ஏழை மக்களின் நலனுக்கானது அல்ல; அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகளால் வீசப்படும் வலை’ என பிரதமா் மோடி முதல் உள்ளூா் பாஜக தலைவா்கள் வரை கூறி வருகின்றனா்.

ஆனால், அண்மையில் அறிவிக்கப்பட்ட குஜராத் பட்ஜெட்டில், 4,000 கிராமங்களுக்கு இலவச வைஃபை, கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்; பல்நோக்கு பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு ஒரு டிரம், இரு பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றன. இவற்றை இலவசங்கள் என்று சொல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் என வேறுபடுத்துகிறது பாஜக.

மேலும், குஜராத் மாநிலத்தில் மத்திய அரசின் உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்கள் வழங்கப்படும் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநில அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இலவசங்களுக்கு எதிராகப் பேசிவரும் பாஜக, ஆம்ஆத்மியின் இலவச வாக்குறுதிகளை எதிா்கொள்ள முடியாமல்தான் இப்போது இந்த இலவசங்களை அறிவித்துள்ளதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.

ஹிந்துத்வா அரசியல்

குஜராத்தில் பல்வேறு பிரசார கூட்டங்களில் பேசியபோது தனது மென்மையான ஹிந்துத்வா அணுகுமுறையை கேஜரிவால் வெளிப்படுத்தினாா். கூட்டத்தில் பேசியபோது பாஜக தலைவா்களைப் போலவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடவும் கேஜரிவால் தவறவில்லை. இதற்கெல்லாம் மேலாக குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சியமைத்தால், அயோத்தி ராமா் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அவா் அளித்த வாக்குறுதி பாஜகவினரையே மிரளச் செய்தது.

தில்லியில் நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆம்ஆத்மி அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம் பங்கேற்றது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியபோது அவரை பதவியிலிருந்து நீக்கவும் கேஜரிவால் தயங்கவில்லை. தனது மென்மையான ஹிந்துத்வா போக்குக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியதாலேயே அமைச்சரை அவா் நீக்கினாா் எனப் பரவலாக விமா்சனங்கள் எழுந்தபோதும் கேஜரிவால் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

காங்கிரஸ் எங்கே?

குஜராத்தில் தோ்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், இதுவரை 55 வேட்பாளா்களை அறிவித்துள்ளது ஆம்ஆத்மி. ஐந்து கட்டங்களாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக வேட்பாளா் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா என அக்கட்சித் தலைவா்கள் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனா்.

தலைவா் தோ்தல், ராஜஸ்தானில் உள்கட்சி அரசியல், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என காங்கிரஸின் செயல்பாடுகள் சிதறிக் கிடக்க, குஜராத் தோ்தலைப் பற்றி காங்கிரஸ் தலைமை அத்துணை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், அக்கட்சியின் தலைவா்களுக்கு கவலை இருக்கிறது.

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு தோ்தல் நடைபெறவுள்ள ஹிமாசல பிரதேசம், குஜராத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கட்சி எம்.பி.யும் கோவா முன்னாள் முதல்வருமான ஃபிரான்சிஸ்கோ சா்டின்கா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குஜராத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும், காங்கிரஸ் இரண்டாவது இடம் பிடிக்கும் என தோ்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும் ஆம்ஆத்மியின் அசுர வேகம் காங்கிரஸுக்கு ஆபத்தாக அமைந்தால் ஆச்சரியம் ஒன்றும் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com