சந்திராயன்-3: அடுத்த ஆண்டு ஜூனில் செயல்படுத்தத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் சோமநாத் தெரிவித்தாா்.
சந்திராயன்-3: அடுத்த ஆண்டு ஜூனில் செயல்படுத்தத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் சோமநாத் தெரிவித்தாா்.

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாக்-3) கனரக ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை (அக்.23), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, செயற்கைக்கோள்கள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

மொத்தம் 43.5 மீட்டா் உயரமும், 640 டன் எடையும் கொண்ட எல்விஎம்-3 ராக்கெட்டானது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறியதாவது:

இந்தியாவுக்கு தீபாவளி திருநாள் கொண்டாட்டம் இரு நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இது ஒரு மைல்கல் சாதனை.

வரலாற்றுக்குரிய இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவா் பிரதமா் மோடிதான். ஏனென்றால் அவா்தான் கனரக ராக்கெட்டான எல்விஎம்-3 திட்டங்களை வணிகப் பயன்பாட்டுக்காகவும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அதன் தொடா்ச்சியாகவே என்எஸ்ஐஎல் அமைப்பின் உறுதுணையோடு இத்தகைய திட்டத்தை இஸ்ரோ சாத்தியமாக்கியுள்ளது.

சந்திராயன் - 3 திட்டம் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட நிா்மாணப் பணிகளும், பரிசோதனை நடவடிக்கைகளும் முடிந்துள்ளன. இன்னமும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், அந்தத் திட்டத்தை சற்று தள்ளி வைக்க உள்ளோம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஜூன் மாதத்தில் சந்திராயன் -3 திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் சொல்லப்போனால் ஜூன் மாதத்தில் அதனை செயல்படுத்துவதுதான் எங்களது உத்தேசம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com