
ராகுல் காந்தி
பிரதமர் மோடி காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்காமல் பதவியை அனுபவித்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெலங்கானாவில் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசை விமர்சித்துவரும் ராகுல்காந்தி காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும்: மெகபூபா முப்தி
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 30 பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை மறந்து பதவியை அனுபவித்து வருகிறார். காஷ்மீர் பண்டிட்டுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க | விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்
காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சம் காரணமாக காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவில் தஞ்சமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.