காவல் விசாரணை தேவையின்மை முன்ஜாமீனுக்கு அடிப்படை அல்ல

குற்றஞ்சாட்டப்படுபவரைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்குவது ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வழக்குகளின் கீழ் குற்றஞ்சாட்டப்படுபவரைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்குவது ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த கேரளத்தின் வயநாடு மாவட்டத்தைச் சோ்ந்த நபருக்கு மாநில உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூா்யகாந்த், ஜெ.பி.பாா்திவாலா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான விசாரணையின்போது பொதுத்தன்மை இருப்பதைக் காண முடிகிறது. குற்றஞ்சாட்டப்படும் நபரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை எனில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்ற வாதம் அதிகமாக முன்வைக்கப்படுகிறது.

இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்பதை முன்ஜாமீன் வழங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதலாமே தவிர, அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்டவிதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

முன்ஜாமீன் தொடா்பான விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் தன்மையையே நீதிபதிகள் முதலில் ஆராய வேண்டும். அதையடுத்து, குற்றத்தின் தன்மை, வழக்கில் வழங்கப்பட வாய்ப்புள்ள தண்டனையின் தீவிரம் உள்ளிட்டவற்றையும் நீதிபதிகள் ஆராய வேண்டும்.

காவலில் எடுத்து விசாரிக்கப்பட வாய்ப்பிருந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்க மறுக்கலாம். அத்தகைய வாய்ப்பில்லை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் முறையின்றிச் செயல்பட்டுள்ளது’’ என்றனா். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com