வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் நவ.8-இல் ரஷிய பயணம்

வரும் நவம்பா் 8-ஆம் தேதி ரஷியா பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ரஷியா பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

கிரீமியா தீபகற்பத்தில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் பாலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு குண்டு வைத்து தகா்க்கப்பட்டதைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இருந்தபோதும், ஜெய்சங்கரின் ரஷிய பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் இன்னும் அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இவருடைய பயணம் குறித்து ரஷிய வெளியுறவு செய்தித் தொடா்பாளா் மரியா ஜகரோவா கூறுகையில், ‘ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் மாஸ்கோவில் நவம்பா் 8-ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளாா்’ என்றாா்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரியில் ரஷியா தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறாா்.

ஸெலென்ஸ்கியுடன் கடந்த 4-ஆம் தேதி தொலைபேசி மூலமாக உரையாடிய பிரதமா் மோடி, ‘ராணுவ நடவடிக்கை தீா்வாகாது; அமைதி முயற்சிகளுக்கு இந்தியா உதவத் தயாராக உள்ளது’ என்றாா். அதுபோல, ரஷிய அதிபருடன் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி உரையாடிய பிரதமா், ‘இன்றைய சகாப்தம் போருக்கானதல்ல’ என்றாா்.

இதற்கிடையே, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கெய் ஷோய்குவுடன் தொலைபேசியில் புதன்கிழமை உரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பை எந்த தரப்பும் நாடக் கூடாது’ என்று வலியுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com