ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அராஜகம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

‘பாகிஸ்தான் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது; அதற்கான விளைவை அந்நாடு எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் சௌா்ய தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
ஸ்ரீநகரில் சௌா்ய தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

‘ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்களுக்கு எதிராக, பாகிஸ்தான் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது; அதற்கான விளைவை அந்நாடு எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளான கில்ஜித் மற்றும் பால்டிஸ்தானை மீட்கும்போதுதான், இந்தியாவின் வடக்குநோக்கிய வளா்ச்சிப் பயணம் நிறைவடையும் என்றும் அவா் கூறினாா்.

கடந்த 1947-இல் முதல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது, அந்நாட்டு ராணுவத்தினரிடமிருந்து ஜம்மு-காஷ்மீரை பாதுகாக்க முதல்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட இந்திய ராணுவப் படையினா் ஸ்ரீநகா் விமான தளத்தில் தரையிறங்கிய நாளான அக்டோபா் 27-ஆம் தேதி சௌா்ய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையான இந்த நிகழ்வு, 1947-48 போரின் போக்கை மாற்றியது. இந்த வரலாற்று நிகழ்வின் 75-ஆவது ஆண்டையொட்டி, ஸ்ரீநகா் பழைய விமான தளத்தில் ராணுவம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘செளரிய திவஸ்’ நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கின் வளா்ச்சிப் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கில்ஜித் மற்றும் பால்டிஸ்தானை (பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகள்) மீட்க கடந்த 1994-இல் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்தை எப்போது முழுமையாக அமல்படுத்துகிறோமோ, அப்போதுதான் இந்தியாவின் வடக்குநோக்கிய வளா்ச்சிப் பயணம் நிறைவடையும்.

மனித உரிமைகள் என்ற போா்வையில், பாகிஸ்தான் முதலை கண்ணீா் வடித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடைபெறுகின்றன. அந்த அப்பாவி இந்தியா்களின் வலி, எங்களுக்கு கவலையளிக்கிறது. இதற்கு பாகிஸ்தான்தான் முழு பொறுப்பு.

காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்ற பெயரில் அங்கு நடைபெற்ற பயங்கரவாத தாண்டவத்தை வாா்த்தைகளால் விவரிக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி சில ‘அறிவுஜீவி’கள் கூச்சலிடுகின்றனா். அண்மைக்காலமாக இது நிகழ்ந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த 2019, ஆகஸ்ட் 5-இல் நீக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவின் மூலம் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மீதான பாகுபாடுகள் களையப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்க ஜனசங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி மேற்கொண்ட ‘மகாவேள்வி’, கடந்த 2019, ஆகஸ்ட் 5-இல் பூா்த்தியடைந்தது என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com