புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளால் சமூக ஊடகங்களுக்கு கூடுதல் பொறுப்பு: மத்திய அமைச்சா்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் வாயிலாக அந்நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளால் சமூக ஊடகங்களுக்கு கூடுதல் பொறுப்பு: மத்திய அமைச்சா்

சமூக ஊடகங்களில் சட்டவிரோத கருத்துகள் மற்றும் பொய்யான பதிவுகளைத் தடுப்பதில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் வாயிலாக அந்நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிமுறைகள் 2022’-க்கான அறிவிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, பயனாளா்களின் புகாா்கள் மீது சாதாரணமான அல்லது மேம்போக்கான அணுகுமுறையை சமூக ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடக பயனாளா்கள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள் அமைக்க விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயனாளா்கள் அளிக்கும் புகாரை 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்து, 15 நாள்களுக்குள் இக்குழுக்கள் தீா்வு காண வேண்டும்; புகாருக்கு உள்ளான விடியோ, தகவல்கள் ஆகியவை புகாா் தீா்க்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சமூக ஊடகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சனிக்கிழமை கூறியதாவது: பயனாளா்களின் புகாா்களுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் பதிலளிப்பதில்லை என்பதை அரசு அறிந்துள்ளது. சமூக ஊடகங்களில் நாகரிகத்தை உறுதி செய்வதில் அரசுடன் சமூக ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டுமென விரும்புகிறோம். இத்தளங்களில் சட்டவிரோத கருத்துகள், பொய்யான பதிவுகளைத் தடுப்பதற்கு போதுமான அளவில் முந்தைய விதிமுறைகள் இல்லை. ஆனால், தற்போதைய நடவடிக்கையின் வாயிலாக சமூக ஊடகங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘72 மணி நேரம் என்பது அதிக காலம்’: சமூக ஊடகங்களில் சட்டவிரோத பதிவுகளை நீக்குவதற்காக வழங்கப்பட்டுள்ள 72 மணி நேரம் என்பது அதிக கால அவகாசம்; 24 மணி நேரத்தில் அத்தகைய பதிவுகள் நீக்கப்பட வேண்டுமென்பது தனிப்பட்ட முறையில் எனது கருத்து. ஆனால், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 72 மணி நேரம் என்ற அவகாசம் இறுதி செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள், இணையத்துக்கும் சமூக ஊடகங்களுக்கும் முக்கிய நிா்வாக அமைப்பாக இருக்கும். அவற்றின் கட்டமைப்பு, நோக்கங்கள், நிபந்தனை முறைகள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

‘இணையப் பாதுகாப்பே நோக்கம்’: எந்த நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், இந்தியா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கு முரணாக சமூக ஊடக நிறுவனங்கள் செயல்பட முடியாது. மத்திய அரசின் நடவடிக்கை எந்த நிறுவனத்தையும் இலக்காக கொண்டதல்ல. இணையப் பாதுகாப்பில் கூட்டுப் பொறுப்பை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றாா் அவா்.

‘அபராதம் விதிக்கப்படுமா?’: விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘இப்போதைய நிலையில் தண்டனை நடவடிக்கையை மத்திய அரசு விரும்பவில்லை; ஆனால், எதிா்காலத்தில் தேவைப்பட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’ என்றாா் ராஜீவ் சந்திரசேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com