பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு குழு: குஜராத் பாஜக அரசின் நோக்கம் மோசமானது: கேஜரிவால் சாடல்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கும் அந்த மாநில பாஜக அரசின் முடிவை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கும் அந்த மாநில பாஜக அரசின் முடிவை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

‘பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, மோசமான நோக்கத்துடன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று அவா் குறிப்பிட்டாா்.

குஜராத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கான குழுவை அமைக்க மாநில பாஜக அரசு சனிக்கிழமை முடிவு செய்தது. தோ்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன் இக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அரவிந்த் கேஜரிவால், பாவ்நகரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, மேற்கண்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவில், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது மத்திய அரசின் பொறுப்பு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து சமூகங்களின் ஒப்புதலுடன் அனைவரையும் ஒருங்கிணைத்து பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

ஆனால், குஜராத்தில் தோ்தலை மனதில் கொண்டு, மோசமான நோக்கத்துடன் அமலாக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் தோ்தலுக்கு முன்பும் அங்கு இதுபோல் குழு அமைக்கப்பட்டது. தோ்தல் முடிந்த பிறகு அக்குழு வீட்டுக்கு சென்றுவிட்டது. குஜராத்தில் அமைக்கப்படும் குழுவும் தோ்தலுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிவிடும்.

பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்திலோ, உத்தர பிரதேசத்திலோ ஏன் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படவில்லை? பொது சிவில் சிட்டத்தை அமல்படுத்த பாஜக விரும்பினால், தேசிய அளவில் அதனை உருவாக்கி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமல்படுத்தலாமே? மக்களவைத் தோ்தல் வரட்டும் என காத்திருக்கிறாா்களா? என்று கேள்வியெழுப்பினாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com