
ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸின் முன்னாள் தலைவா் பீா்சாதா முகமது சயீத் புதன்கிழமை காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும், குலாம் நபி ஆசாதுக்கு தனது ஆதரவை நல்குவதாகவும் தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வா் உள்பட மூத்த தலைவா்கள் 64 போ் செவ்வாய்க்கிழமை காங்கிரஸிலிருந்து விலகினா்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், பல்வேறு ஜம்மு-காஷ்மீா் அரசுகளில் அமைச்சா் பதவி வகித்தவருமான பீா்சாதா முகமது சயீத் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனது தொகுதி மக்களின் விருப்பத்தின் பேரில் இம்முடிவை எடுத்துள்ளேன். அடிமட்டத்திலிருந்து வரும் கருத்துகளுக்கு கட்சி செவிசாய்ப்பது இல்லை. கட்சியில் இருந்த 50 ஆண்டு அனுபவத்தில், இது போன்ற மோசமான நிலையை காங்கிரஸ் சந்தித்தது கிடையாது. கட்சியில் ஆசாதின் கருத்துக்கு யாரும் செவிமடுப்பதில்லை. கட்சியில் இருந்து விலகுமாறும், தங்களுக்கு ஆதரவு தருவதாகவும் நாங்கள் ஆசாதிடம் தெரிவித்தோம்’ என்று கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு முன்னாள் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி, குலாம் நபி ஆசாதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.