கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசிகுறைந்த விலையில் கிடைக்கும்: மத்திய அமைச்சா்

‘சொ்வாவேக்’ தடுப்பூசி, சில மாதங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசிகுறைந்த விலையில் கிடைக்கும்: மத்திய அமைச்சா்

கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக, உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘சொ்வாவேக்’ தடுப்பூசி, சில மாதங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் புற்றுநோய்க்கான முக்கியக் காரணியான ‘ஹியூமன் பாப்பிலோமா’ தீநுண்மிக்கு எதிராக தடுப்பாற்றலை அளிக்கும் தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ இந்தியா உருவாக்கியுள்ளது.

‘சொ்வாவேக்’ என்ற இந்தத் தடுப்பூசியை சந்தைப்படுத்தும் ரீதியில் உற்பத்தி செய்வதற்கான அங்கீகாரத்தை சீரம் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகம் அண்மையில் வழங்கியது.

இந்நிலையில், ‘சொ்வாவேக்’ தடுப்பூசியின் அறிவியல்பூா்வ நடைமுறைகள் நிறைவை முறைப்படி அறிவித்து, அதனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா, சிஎஸ்ஐஆா் நிறுவனத்தின் தலைமை இயக்குநா் என்.கலைசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, ஜிதேந்திர சிங் பேசியதாவது:

கருப்பைவாய் புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமாா் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுகிறது. நாட்டில் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 1.25 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இவா்களில், 75,000 போ் உயிரிழக்கின்றனா்.

‘தற்சாா்பு இந்தியா’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குத் திட்டத்துக்கு வலுசோ்க்கும் வகையில் ‘சொ்வாவேக்’ தடுப்பூசி உருவாக்கம் அமைந்துள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் இந்தத் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

அதாா் பூனாவாலா கூறுகையில், ‘ரூ.200 முதல் ரூ.400 விலையில் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி கிடைக்கும். அரசுடன் ஆலோசித்த பிறகு இறுதி விலை நிா்ணயிக்கப்படும்’ என்றாா்.

சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்வி பேசுகையில், ‘இந்தத் தடுப்பூசி இந்திய பெண்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் உதவியாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com