மோடியின் புகைப்படத்தைத்தானே கேட்டீர்கள்.. சிலிண்டரில் ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி

பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என்று கேள்வி கேட்ட நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி


ஹைதராபாத்: மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும் போது, நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என்று கேள்வி கேட்ட நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

தெலங்கானா சென்றிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை என்று காமாரெட்டி மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டுள்ளார்.

நேற்று தெலங்கானா சென்றிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் தொடர்பான பல செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை என்று கேட்டு மாவட்ட ஆட்சியரை அவர் கடிந்துகொண்ட சம்பவம் தற்போது செய்தியாகியிருக்கிறது. விடியோவும் வைரலாகி வருகிறது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர், தெலங்கானாவில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் மீது மோடிஜி ரூ.1105 என்று மோடி சிரிப்பது போன்ற புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பான விடியோவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப்பரவி வருகிறது.

முன்னதாக, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிக்கான மானியத்தில், மாநில அரசின் பங்கும், மத்திய அரசின் பங்கும் இருக்கிறது என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் ஜிதேஷ் பட்டீல் பதிலளித்ததைத் தொடர்ந்து, அடுத்த 30 நிமிடத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளுமாற நிர்மலா சீதாராமன் உத்தரவும் பிறப்பித்தார்.

பின்நூர் பகுதியில் பயனாளிகளிடம் பேசிக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமன், அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம், மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசிக்கான மானியத்தில் மத்திய அரசு ரூ.29ஐ வழங்குகிறது. மாநில அரசு வெறும் 4 ரூபாய்தான் வழங்குகிறது. அப்படியிருக்கும்போது, ஏன் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மானிய பங்கீடு குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் பதிலளித்ததைக் கேட்டு நிர்மலா சீதாராமன் கடும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த விவரங்களை 30 நிமிடங்களில் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.

ஆனால், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுவதற்கோ, பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் கொண்டு வந்து மாட்டுமாறு கூறுவதற்கோ, மத்திய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com