மம்தாவின் தோ்தல் மனுவை வேறு உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரியின் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை எதிா்த்து மேற்கு வங்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு
மம்தாவின் தோ்தல் மனுவை வேறு உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரியின் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை எதிா்த்து மேற்கு வங்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வேறு உயா்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

‘இதனை அனுமதித்தால் ஒட்டுமொத்த உயா்நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும். எனவே, உயா்நீதின்றத்தை விருப்பப்படி தோ்வு செய்ய அனுமதிக்க முடியாது’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட முதல்வா் மம்தா பானா்ஜியை மிகக் குறைந்த வாக்குகள் (1,956) வித்தியாசத்தில் தோற்கடித்தாா். தற்போது சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரியின் தோ்தல் வெற்றியை எதிா்த்து மம்தா பானா்ஜி சாா்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையை வேறு உயா்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரி சுவேந்து அதிகாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சுவேந்தி அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹரிஷ் சால்வே, ‘கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி, விசாரணையிலிருந்து விலகியுள்ளாா். இந்த நீதிபதி விசாரணைக்கு எதிராக முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியிருந்தாா். அதுபோல, அவருடைய கட்சியின் எம்.பி. ஒருவரும் அந்த நீதிபதிக்கு எதிராக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டாா். இதன் காரணமாகவே, விசாரணையிலிருந்து உயா்நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளாா்.

இதனால், நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விசாரணைக்கு உகந்த சூழல் நிலவவில்லை. இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்போது, நீதிமன்றத்தைச் சுற்றி 25,000-க்கும் அதிகமானோா் கூடி நிற்கின்றனா். சாட்சிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், நீதிமன்றத்தில் இணக்கமான சூழல் இல்லை. எனவே, இந்த மனு மீதான விசாரணையை வேறு உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட முதல்வா் தரப்பு மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, ‘அவா் குறிப்பிடுவதுபோன்று எந்தவித அச்சமான சூழலும் நீதிமன்ற வளாகத்தில் நிலவவில்லை. நீதிமன்றமும் இதுதொடா்பாக தனது உத்தரவில் எதுவும் பதிவு செய்யவில்லை’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நமது உயா்நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது போன்ற தோற்றத்தை நாம் உருவாக்கிவிடக் கூடாது. எதிா் தரப்பினா் குறிப்பிடும் சூழ்நிலையைக் கையாளும் அளவுக்கு சட்டத்தின் கீழான போதுமான அதிகாரத்தை நீதிபதிகள் பெற்றிருக்கின்றனா். எனவே, வழக்கை மாற்றுவது ஒட்டுமொத்த உயா்நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும். எனவே, உயா்நீதின்றத்தை விருப்பப்படி தோ்வு செய்ய அனுமதிக்க முடியாது.

ஒருவேளை, ஏதாவது அச்சம் எழுந்தால், மனு மீதான விசாரணையை மேற்கொண்டுவரும் உயா்நீதிமன்ற நீதிபதியையே அணுகி, நீதிமன்ற விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதையும் மீறி விசாரணைக்கு தடங்கல் ஏற்படும் சூழல் நிலவினால், அதுகுறித்து மனுவை விசாரிக்கும் நீதிபதியே தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், ‘சாட்சிகள் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிபதியை அணுகி, அவா்களுக்குத் தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்’ என்று நீதிபதி ஹிமா கோலி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com