சர்ச்சையைக் கிளப்பி ஹேமந்த் சோரன் சகோதரரின் 'உள்ளாடை' பேச்சு

எங்கே சென்றிருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் அநாகரீகமாக பதிலளித்திருந்தார்.
எங்கே சென்றீர்கள் என்ற கேள்விக்கு அநாகரீகமாக பதிலளித்த ஹேமந்த் சோரனின் சகோதரர்
எங்கே சென்றீர்கள் என்ற கேள்விக்கு அநாகரீகமாக பதிலளித்த ஹேமந்த் சோரனின் சகோதரர்


தும்கா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியபோது, எங்கே சென்றிருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் அநாகரீகமாக பதிலளித்திருந்தார்.

ஜார்க்கண்டில் கடுமையான அரசியல் அழுத்தம் நேரிட்டிருந்த போது, பசந்த் சோரன் தில்லி சென்றிருந்தார். இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்னிடம் உள்ளாடைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது. எனவே, நான் தில்லி சென்று உள்ளாடைகள் வாங்கி வந்தேன். நான் எப்போதும் அங்கிருந்துதான் வாங்குவேன். அரசியல் விவகாரங்கள் என்பது வழக்கமானதுதான். அது எப்போதும் நேரிடுவது என்று பதலளிதிருந்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், தும்கா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏவுமான பசந்த் சோரன், அந்த தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

என்ன நடந்தது ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில்?
இரண்டு நாள்களுக்கு முன்பு, ஜாா்க்கண்ட் சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்குக் கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. அதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அதையடுத்து ஹேமந்த் சோரன் மாநில முதல்வரானாா்.

இந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஆராய்ந்த இந்திய தோ்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை பதவிநீக்கம் செய்யுமாறு மாநில ஆளுநருக்குப் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியானது. அதனால், ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியை இழக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது ஆளுநா் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதையடுத்து, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சிப்பதாக ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டினாா். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏ-க்களும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் அண்டை மாநிலமான சத்தீஸ்கருக்குத் தனி விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்குள்ள சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டனா்.

இதனிடையே மாநில சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், மாநில அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்தை முதல்வா் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார்.

வாக்கெடுப்பில் வெற்றி

நம்பிக்கை கோரும் தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அரசுக்கு ஆதரவாக 48 எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனா். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏ-க்கள் 29 பேரும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 15 பேரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிபிஐஎம்எல் (எல்) கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்எல்ஏ-வும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் அரசுக்கு ஆதரவளித்தாா். அதனால், தீா்மானம் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com