‘கடமைப் பாதை’யை இன்று திறந்துவைக்கிறாா்: பிரதமா் மோடி

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ‘கடமைப் பாதை’யை (முன்பு ராஜபாதை) பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்.8) திறந்துவைக்க உள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ‘கடமைப் பாதை’யை (முன்பு ராஜபாதை) பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்.8) திறந்துவைக்க உள்ளாா்.

மேலும், இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சிலையையும் பிரதமா் திறந்துவைக்க உள்ளாா். 25 அடி உயரம் கொண்ட இச்சிலை, 65 மெட்ரிக் டன் எடையுள்ள ஒற்றை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டதாகும்.

குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதை முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ‘கடமைப் பாதை’ (கா்த்தவ்ய பாதை) என பெயா் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகார சின்னத்தை குறிப்பதிலிருந்து மக்களுக்கான உரிமை மற்றும் அதிகாரமளித்தலை குறிப்பதாக அப்பாதை மாறியுள்ளது என பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள கடமைப் பாதையை சுற்றி 3.90 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. 15.5 கி.மீ. பரப்பில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 1,125 வாகனங்கள் வரிசையாக நிறுத்தும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 74 புராதன விளக்கு கம்பங்களுடன் புதிதாக 900 மின் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை, தண்ணீா் மறுசுழற்சி, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா கேட் அருகே பொருள்கள் விற்பனைக்காக 5 பிரத்யேக பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தலா 40 கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு வசதியாக கடமைப் பாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் உள்ள கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 ஏக்கரில் உள்ள கால்வாய்களில் 16 பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. கிருஷி பவன், வாணிஜ்ய பவன் அருகில் உள்ள இரண்டு கால்வாய்களில் படகு சவாரி அனுமதிக்கப்படவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட வசதிகளில் தூய்மையை பராமரிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிக பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com