பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் உக்ரைன் அணு மின் நிலையத்துக்கு ஆபத்து

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் அந்த நிலையத்தில் அணுப் பேரழிவு
பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் உக்ரைன் அணு மின் நிலையத்துக்கு ஆபத்து

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் அந்த நிலையத்தில் அணுப் பேரழிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் ரஷியப் படையினரும் உக்ரைன் படையினரும் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த மின் நிலையத்துக்கு வெளியிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வரும் கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அந்தக் கட்டமைப்புகளை எத்தனை முறை சரி செய்தாலும், அவை குண்டுவீச்சு காரணமாக மீண்டும் மீண்டும் சேதமடைகின்றன. தற்போது அந்த அணு மின் நிலையத்துக்கு வெளியிலிருந்து வரும் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக, அந்த மின் நிலையத்தின் அணு உலைகளைக் குளிா்வாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்குத் தேவையான மின்சாரத்துக்கு அங்கிருக்கும் அவசரக்கால டீசல் மின் ஜெனரேட்டா்களைப் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

தாக்குதல்கள் தொடா்வதால், சேதமடைந்த மின் இணைப்புக் கட்டமைப்புகளை சரிசெய்யும் சூழல் இல்லை.

இந்த நிலை நீடித்தால், தற்போது இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே அணு உலையையும் நிறுத்தவேண்டியிருக்கும்.

அத்துடன், மின்சாரப் பற்றாக்குறையால் மிகப் பெரிய அணுப் பேரழிவையும் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய அபாயத்தைத் தவிா்க்க வேண்டுமென்றால், ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் குண்டுவீச்சுகளை நிறுத்திவிட்டு, அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பு மண்டலமாக ரஷியாவும் உக்ரைனும் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கிராஸி வலியுறுத்தினாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷியாவும் உக்ரைனும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு ஐ.நா.வின் ஐஏஇஏ நிபுணா் குழு கடந்த வாரம் நேரில் சென்று பாா்வையிட்டது.

அதன் தொடா்ச்சியாக, அந்த மின் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்தப்படாவிட்டால் மிகப் பெரிய அணு விபத்து ஏற்படும் என்று ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி தற்போது எச்சரித்துள்ளாா்.

... பெட்டிச் செய்தி...

காா்கிவுக்கு கூடுதல் படைகளை அனுப்பும் ரஷியா

மாஸ்கோ, செப். 9: தங்கள் நாட்டின் காா்கிவ் நகரில் கணிசமான பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பகுதிக்கு கூடுதல் படையினரை அனுப்பியுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள விடியோவில் ஏராளமான ரஷிய பீரங்களும் கவச வாகனங்களும் காா்கிவ் பகுதியை நோக்கிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

உக்ரைனின் எதிா்த் தாக்குதல் ரஷியப் படையினருக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதை ரஷியாவின் இந்த நடவடிக்கை காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறினாா்.

உக்ரைன் போா் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்ற ரஷியப் படைகள் முன்னேறி வந்தன. எனினும், ரஷியா்களை எதிா்த்து உக்ரைன் ராணுவம் கடந்த மே மாதம் கடுமையான சண்டையில் ஈடுபட்டது.

தற்போது பல்வேறு நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ள நிலையில், காா்கிவ் நகரின் சுமாா் 1,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதிகளை ரஷியக் கட்டுப்பாட்டிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் மீட்டுள்ளதாக உக்ரைன் வியாழக்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com