போக்குவரத்து நெரிசல் எனும் துயரம்: உயிரைக் காக்க 3 கி.மீ. தொலைவுக்கு ஓடிய டாக்டர்

உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக, காரிலிருந்து இறங்கி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரைக் காக்க 3 கி.மீ. தொலைவுக்கு ஓடிய டாக்டர்
உயிரைக் காக்க 3 கி.மீ. தொலைவுக்கு ஓடிய டாக்டர்


பெங்களூரு: இது நோயாளியின் வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயான போராட்டம். பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றான கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக, காரிலிருந்து இறங்கி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கோவிந்த் நந்தகுமார், இறைப்பை குடல் அறுவைசிகிச்சை மருத்துவர். சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில், அவசர கதியில் லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய விரைந்து கொண்டிருந்தார்.

மருத்துவமனையை நெருங்கும் நேரத்தில் அவர் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தார். 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவுதான் இருந்தது. ஆனால், கூகுள் மேப் அதனைக் கடக்க 45 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று சொன்னது. இது மிகவும் மோசமான நிலையை எனக்கு உணர்த்தியது என்கிறார்.

உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தேன். காரை விட்டு இறங்கி, நடந்தே மருத்துவமனையை அடைவது என்பதுதான். நல்ல வேளையாக கார் ஓட்டுநர் வைத்திருந்தேன். அவரிடம் காரை விட்டுவிட்டு, சாலையில் இறங்கினேன். ஏற்கனவே நான் ஒரு தீவிர உடற்பயிற்சியாளன் என்பதால், எனக்கு சாலையில் ஓடுவது மிகவும் எளிதாகவே இருந்தது.

சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடினேன். அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்தேன் என்கிறார் சிரித்தபடி.

அவர் மற்றொரு தகவலையும் கூறுகிறார். அதாவது, இப்படி ஓடுவதும், இறங்கி நடப்பதும் தனக்கு ஒன்றும் புதிதல்ல என்றும், பல வேளைகளில் பெங்களூருவின் பல பகுதிகளில் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது இப்படி சென்றிருக்கிறேன் என்கிறார். பல சமயங்களில் ரயில் தண்டவாளங்களைக் கூட கடந்து ஓடியிருக்கிறேன் என்கிறார்.

அவர் மற்றொரு கவலை தரும் தகவலையும் கூறுகிறார். நான் மருத்துவர். நன்கு திடகாத்திரமாக இருக்கிறேன். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இறங்கி ஓடிவிடுகிறேன். நோயாளியுடன் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் போது அவருடன் இருக்கும் உறவினர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். ஆம்புலன்ஸுக்கு வழி விடக் கூட இடமிருக்காது என்கிறார் கவலையோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com