தொழிலதிபர் படுக்கையறையில் சுமார் ரூ. 17 கோடி எப்படி? அமீர்கானை தேடும் அமலாக்கத்துறை 

தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, படுக்கை அறையில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 கோடி ரூ.2000, 500, 200 நோட்டுகள் கைப்பற்றப்பட்ட
தொழிலதிபர் படுக்கையறையில் சுமார் ரூ. 17 கோடி எப்படி? அமீர்கானை தேடும் அமலாக்கத்துறை 

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, படுக்கை அறையில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 கோடி ரூ.2000, 500, 200 நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான தொழில் அதிபர் அமீர்கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

கடந்த 2021ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஆமிர் கான் இ-நக்‍கட்ஸ் மொபைல் கேமிங் விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இது குறித்து பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட அமீர் கான் மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சனிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ரூ.17 கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில், கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள வளாகத்தில் நடத்திய சோதனையில், படுக்‍கையறையில் படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாக ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2000, 500, 200 நோட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் வங்கி ஊழியர்களை வரவழைத்து, ஐந்து நோட்டு எண்ணும் இயந்திரங்களின் உதவியுடன் ரொக்கப் பணத்தின் சரியான மதிப்பைக் கண்டறிந்தது.

மேற்கு வங்க தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கார்டன் ரீச், பார்க் ஸ்ட்ரீட் மற்றும் மோமின்பூர் பகுதிகள் போன்ற இடங்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்களை அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த சோதனைகள் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே புதிய வார்த்தைப் போரை தூண்டியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், சம்பந்தப்பட்ட தொழிலதிபருடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். 

ஆனால், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கு வங்கம் போன்ற பாஜக அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களுக்கு மட்டுமானதா? என்று கேள்வி எழுப்பிய ஹக்கீம், "7 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தின் ஆதாரம் குறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், 7 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பற்றி என்ன? அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களின் தவறு ஏன் வெளிச்சத்திற்கு வரவில்லை? "பாஜக ஆளும் மாநிலங்களிலும் தொழிலதிபர்கள் உள்ளனர், அவர்களும் பெரிய அளவில் பணம் குவித்திருக்கலாம்," என்று அவர் கூறினார்.

மேலும், மத்திய அரசு நிறுவனங்களின்  "துன்புறுத்தலுக்கு" என்ற அச்சத்தை பரப்புவதன் மூலம் முதலீட்டாளர்களை மாநிலத்திலிருந்து விரட்டவும், முதலீட்டாளர்களை வங்காளத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள்" என்று ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

ஹக்கீமின் கருத்துகளுக்கு பதிலளித்த பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, பணமோசடி செய்பவர்களுக்கும் திரிணமூல் காங்கிரஸ் இடையிலான புனிதமற்ற தொடர்பை மக்கள் அறிந்திருப்பதால் அச்சத்தில் இதுபோன்ற அறிக்கைகள் வருவதாகக் கூறினார்.

மேலும், அமலாக்கத் துறை சோதனைகள் பொதுவாக வணிக சமூகத்திற்கு எதிராக நடைபெறவில்லை. இது நேர்மையற்ற தொழிலதிபர்களுக்கு எதிராக மட்டுமே நடைபெறுவதாகவும், முன்னாள் மாநில போக்குவரத்து அமைச்சருக்கு மறைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா?" என்று பட்டாச்சார்யா கூறினார்.

இந்நிலையில், சோதனையின் போது தலைமறைவான அமீர்கானை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com