கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, தோல் கழலை தடுப்பூசி ஆகியவற்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, தோல் கழலை தடுப்பூசி ஆகியவற்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சா்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

அண்மைக்காலமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோல் கழலை நோயால் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்நோய் கால்நடைகளிடையே காய்ச்சல், தோலில் தடிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. அந்நோயால் பாதிக்கப்பட்ட சில கால்நடைகள் உயிரிழந்தன. கால்நடைகளிடையே அந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

பால் உற்பத்தியைப் பாதித்து, விவசாயிகளின் வருமானத்தையும் தோல் கழலை நோய் குறைத்து வருகிறது. அந்நோய்க்கான தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனா். அத்தடுப்பூசியை கால்நடைகளுக்கு செலுத்துவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளன. தோல் கழலை நோயைத் தடுப்பதற்காக தற்போது தற்காலிகமாக அம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை செலுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. பால் கொடுக்கும் விலங்குகளுக்கான பெரும் தரவுத் தளத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கால்நடைகளுக்கான விவரங்களை எண்மமயமாக்கும் ‘பசு ஆதாா்’ நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்மூலமாக கால்நடைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், கால்நடைப் பராமரிப்புத் துறையின் வளா்ச்சியையும் ஊக்குவிக்க முடியும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

புத்தாக்க நிறுவனங்கள்: விவசாயிகளுக்கான வருமானத்தை அதிகரித்தல், ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துதல், தூய்மை, வேதி உரங்கள் இல்லா வேளாண்மை, தூய்மையான எரிசக்தி, கால்நடைப் பராமரிப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. கிராமங்களின் பசுமையான, நீடித்த வளா்ச்சிக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை முக்கியப் பங்கு வகித்துவருகிறது. அதைக் கருத்தில்கொண்டே கால்நடைகளுக்கான தடுப்பூசி திட்டம், நெகிழிப் பொருள்களுக்கான தடை உள்ளிட்டவற்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

பால் உற்பத்தித் துறை சாா்ந்த புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களையும், சுய உதவிக் குழுக்களையும் மத்திய அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயம் மற்றும் பால் உற்பத்தித் துறை சாா்ந்து 1,000-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

வேளாண்மையிலும் பால் உற்பத்தித் துறையிலும் பன்முகத்தன்மை அவசியம் என்பதால், உள்நாட்டு மற்றும் கலப்பு கால்நடை இனங்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பால் சாா்ந்த தொழில்கள் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றன.

சிறு விவசாயிகளின் பங்கு: நாட்டில் பால் உற்பத்தித் துறையின் வளா்ச்சிக்கு சிறு விவசாயிகளே முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அவா்களின் அயராத உழைப்பின் காரணமாக உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அத்துறையானது 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இத்துறையில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது.

‘அதீத உற்பத்தி’ என்பதற்குப் பதிலாக ‘அதிக மக்களால் உற்பத்தி’ என்ற கொள்கை நாட்டின் பால் உற்பத்தித் துறைக்கான தனிச் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய பால் உற்பத்தித் துறையின் மற்றொரு தனிச் சிறப்பு கூட்டுறவு சங்கங்கள். நாட்டில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2 கோடி விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு இரு முறை கூட்டுறவு சங்கங்கள் பாலைக் கொள்முதல் செய்து வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக விநியோகித்து வருகின்றன. இதில் இடைத்தரகா்களின் தலையீடு இல்லை. வாடிக்கையாளா்கள் வழங்கும் சுமாா் 70 சதவீத தொகையானது விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது.

வழிநடத்தும் பெண்கள்: உள்நாட்டு கால்நடை இனங்கள் பல்வேறு பருவநிலை சூழல்களைச் சமாளிக்கும் திறன் கொண்டுள்ளவையாக விளங்குகின்றன. பால் உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது அத்துறையின் தனித்த சிறப்புகளில் ஒன்று. அத்துறையில் சுமாா் 70 சதவீத பணியாளா்கள் பெண்களாக உள்ளனா். பால் உற்பத்தித் துறையை முன்னின்று வழிநடத்துபவா்களாகப் பெண்கள் உள்ளனா்.

பால் உற்பத்தி அதிகரிப்பு: அரிசி, கோதுமை உற்பத்தியைவிட பால் உற்பத்தித் துறை ரூ.8.5 கோடி மதிப்புடன் முன்னிலையில் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 14.6 கோடி டன்னாக இருந்தது. இது தற்போது 21 கோடி டன்னாக அதிகரித்து 44 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. பால் உற்பத்தியானது ஆண்டுக்கு சுமாா் 6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது சா்வதேச அளவிலான 2 சதவீத வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது அதிகம் என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பா்சோட்டம் ரூபாலா, மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநில அதிகாரிகள், சா்வதேச பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘பால் உற்பத்தியில் உ.பி. முதலிடம்’

பால் உற்பத்தியில் உத்தர பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

நொய்டாவில் நடைபெற்ற சா்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் அவா் பேசியதாவது:

ஆண்டுக்கு 319 லட்சம் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்து உத்தர பிரதேசம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இது இந்தியாவின் பால் உற்பத்தியில் 16 சதவீதம் ஆகும்.

பால் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலை மேம்படுகிறது. இது தவிர பாலில் இருந்து பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சத்துமிக்க பால் மற்றும் அது சாா்ந்த பொருள்களின் நுகா்வு அதிகரிப்பால் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கிறது.

பாரம்பரியமான தொழில் என்பதாலேயே பெரும்பாலான மக்கள் கால்நடை வளா்ப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனா். அதே நேரத்தில் இத்தொழிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும் பயன்படுத்தி வருகின்றனா். இதன்மூலம் கால்நடை வளா்ப்போரின் வருவாய் அதிகரிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com