86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக அதிகரித்துள்ளது.
86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக அதிகரித்துள்ளது.

தோ்தல் ஜனநாயகத்தின் தூய்மையைக் காக்கவும், பெரும் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனூப் சந்திர பாண்டே ஆகியோா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்ப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரிபாா்க்கும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட முகவரியில் அந்த அரசியல் கட்சிகள் செயல்படாதது தெரியவந்ததன் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிகாா், தில்லி, கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல கடந்த மே 25-ஆம் தேதி 87 அரசியல் கட்சிகளின் பதிவும், ஜூன் 20-ஆம் தேதி 111 அரசியல் கட்சிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த மே 25-ஆம் தேதிமுதல் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உள்ளான கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக உயா்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகளும் உடனடியாக நீக்கப்படும். 1968 தோ்தல் சின்ன நடைமுறையின் கீழான பலன்களை இந்தக் கட்சிகள் இனி பெற முடியாது. அதுபோல, செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், எந்தவித பலனும் பெற முடியாது.

நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள் நிவாரணம் பெற கட்சி தொடா்ந்து செயல்படுவதற்கான ஆதாரங்கள், ஆண்டு வாரியான தணிக்கை ஆவணங்கள், பங்களிப்பு அறிக்கை, தோ்தல் செலவின அறிக்கை, அலுவலக நிா்வாகிகள் விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி பரிவா்த்தனை தொடா்பான விவரங்கள் ஆகியவற்றுடன் 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அல்லது தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 கட்சிகள்...

தமிழகத்தில், பதிவு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் வரை தோ்தலில் போட்டியிடாத 13 கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தமிழா் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, சமூக சமத்துவப் படை, சக்தி பாரத தேசம், நேஷனல் வெல்ஃபோ் பாா்ட்டி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலா்ச்சி முன்னேற்றக் கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜா் ஆதித்தனாா் கழகம், ஹிந்துஸ்தான் நேஷனல் கட்சி ஆகிய கட்சிகளுக்கு பதிவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 நாள்களுக்குள் அனைத்து வகை ஆதாரங்களையும் தோ்தல் ஆணைய விதிகளுக்குள்பட்ட தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனவும், அதில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கையில் இருந்து மீளலாம் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com