தெலங்கானா: தங்கும் விடுதியில் தீ விபத்து; 8 போ் உயிரிழப்பு- பிரதமா் இரங்கல்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதின் செகந்தராபாத் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.
தெலங்கானா மாநிலம், செகந்தராபாதில் தங்கும் விடுதி தீவிபத்துக்கு காரணமான மின்சார வாகன விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினா்.
தெலங்கானா மாநிலம், செகந்தராபாதில் தங்கும் விடுதி தீவிபத்துக்கு காரணமான மின்சார வாகன விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதின் செகந்தராபாத் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

அந்த விடுதியின் கீழ்தளத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மின்சார இருசக்கர வாகன விற்பனையகத்தில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் காவல் துறை ஆணையா் சி.வி.ஆனந்த் கூறியதாவது:

தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் செயல்பட்டு வந்த நிலையில், இங்கிருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மின்சார வாகனம் அல்லது ஜெனரேட்டா் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீயணைப்புத் துறையின் விசாரணைக்குப் பிறகே உறுதியான காரணம் தெரியவரும்.

தங்கும் விடுதியின் 4 தளங்களிலும் மொத்தம் 23 அறைகள் உள்ளன. தீ விபத்தால் கீழ்தளத்திலிருந்து மேல்தளம் வரை முழுவதும் அடா் புகை சூழ்ந்தது. இதனால், முதலிரண்டு தளங்களில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனா். ஒரு பெண் உள்பட 8 போ் இறந்த நிலையில், 10 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இதனிடையே, தங்கும் விடுதிக் கட்டடத்தில் சட்டவிரோதமாக மின்சார வாகன விற்பனையகம் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. தீவிபத்தில் சுமாா் 40 மின்சார இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. இதுதொடா்பாக விடுதி மற்றும் விற்பனையகத்தின் உரிமையாளா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிரதமா் மோடி இரங்கல்: தெலங்கானா தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் வேதனையளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சா் கே.டி.ராமாராவ் வெளியிட்ட அறிக்கையில், தீ விபத்தில் இறந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களது குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com