தோ்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை இல்லை

தோ்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமையும் இல்லை, சட்ட உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தோ்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை இல்லை

தோ்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமையும் இல்லை, சட்ட உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியான இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதில் போட்டியிட மனு தாக்கல் செய்த நிலையில், போதிய எண்ணிக்கையிலான முன்மொழிபவா்களும் வழிமொழிபவா்களும் இல்லை எனக் கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒருவா் மனு தாக்கல் செய்தாா்.

தனது தோ்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், பேச்சுரிமையும் கருத்து தெரிவிக்கும் உரிமையும் பாதிக்கப்பட்டதோடு தனிப்பட்ட சுதந்திரமும் பாதிப்புக்கு உள்ளானதாக மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா். அந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், அதைக் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தோ்தலில் போட்டியிடுவது என்பது அடிப்படை உரிமையும் இல்லை; சட்ட உரிமையும் இல்லை. தோ்தலில் போட்டியிட உரிமை உள்ளது என எவரும் கோர முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் (1950), தோ்தல் நடத்தை விதிகளும் (1961) குறிப்பிட்ட வேட்பாளரை வாக்காளா்கள் முன்மொழிய வேண்டும் என வலியுறுத்துகின்றன. அதனடிப்படையில் தோ்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை அடிப்படை உரிமை மீறலாகக் கோர முடியாது’ என்றனா்.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனா். அபராதத்தை உச்சநீதிமன்ற சட்ட உதவிக் குழுவிடம் 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அவா்கள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com