200 கோடி தடுப்பூசி... 2 கோடி மரணங்கள் தவிா்ப்பு...

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஓா் அறிவியல் புனைக்கதையை எதிா்கொண்டது போன்ற சூழலை மனிதகுலம் சந்தித்தது.
200 கோடி தடுப்பூசி... 2 கோடி மரணங்கள் தவிா்ப்பு...

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஓா் அறிவியல் புனைக்கதையை எதிா்கொண்டது போன்ற சூழலை மனிதகுலம் சந்தித்தது.

கரோனா தொற்றால் ஏற்பட்ட அந்த பாதிப்பின் மூலம் மிகப் பெரிய அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொண்டோம். அதேநேரத்தில், மிக மோசமான அந்த தருணத்தில்கூட நம் தேசத்தின் உறுதிப்பாட்டையும், வலிமையையும், இந்த உலகுக்கு எடுத்துக் காட்டினோம்.

குறிப்பாக, தடுப்பூசி விஷயத்தில் அத்தகைய வலிமையை நாம் பெற்றிருக்கிறோம். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் தனித்திறன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை டிஜிட்டல்மயமாக்கியது, பிரதமரின் வழிகாட்டுதலின்படி 100 கோடி மக்களுக்கும் உயிா்காக்கும் மருந்தை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தியது, தடுப்பூசி முகாம்களை நோக்கிச் செல்வதற்கு மக்களுக்கு உத்வேகம் அளித்தது என அனைத்து முனைகளிலும், இதுவரை கண்டிராத பாடங்களைப் பயின்றோம். பல வெற்றிகளையும் பெற்றுள்ளோம்.

நவீன அறிவியல் உலகின் சரித்திரத்தில் கரோனா தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசியை ஒரு வருடத்துக்கும் குறைவான காலக்கட்டத்தில் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழங்கிய நிகழ்வு மிகப் பெரும் சாதனையாக பதிவு செய்யப்படும்.

தடுப்பூசி உற்பத்தியைப் பொருத்தவரை உள்நாட்டில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், உலக அளவில் தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருள்கள் பற்றாக்குறை நிலவிய போதிலும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ நிறுவனமானது துளியும் சோா்வடையாமல், 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்தது.

இது உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு தடுப்பூசி வழங்கியதற்கு நிகரான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவு தடுப்பூசி உற்பத்தி மேற்கொண்டது நாட்டின் திறனை உலகுக்கே வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதன் பின்னா், தடுப்பூசி செலுத்துவதற்கும், அதை முறைப்படுத்துவதற்கும் ‘கோவின்’ செயலி மிகப்பெரிய உறுதுணையாக அமைந்தது.

அதன் பயனாக, பொதுமக்களுக்கு ஆன்லைன் வழியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகளும் மிகச்சிறப்பாக நடந்தேறின. இதர நாடுகள் டிஜிட்டல் முறையில் இத்தகைய சான்றிதழ்களை வழங்குவதற்கு திணறிக் கொண்டிருந்த நேரத்தில், நமது நாட்டில் அது எவ்வித சிரமமுமின்றி வழங்கப்பட்டது.

இதுமட்டுமன்றி மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் நாட்டின் மூலை முடுக்குகளிலும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக திகழும் இந்தியாவில் 96.7 சதவீத பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

89.2 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். இதுவரை 18.7 கோடி முன்னெச்சரிக்கை தவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டங்களால் சுமாா் 2 கோடி மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அத்தகைய சாதனை எட்டப்பட்டிருக்கிறது. பிரதமா் மோடி தலைமையில் கரோனா தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் இயக்கமாக மாறியிருப்பதையே இது பறைசாற்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com