உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்கள் சோ்க்கைக்கு மாற்று வெளிநாட்டு கல்வி நிறுவன விவர வலைதளம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை

‘கல்வி மாற்று சோ்க்கைத் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் அவா்களின் படிப்பை முடிக்க வசதியாக மாற்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் விவரங்கள் அடங்கிய வலைதளம் ஒன்றை உருவாக்கலாம்’

‘ரஷிய போரால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவா்கள் மத்திய அரசின் ‘கல்வி மாற்று சோ்க்கைத் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் அவா்களின் படிப்பை முடிக்க வசதியாக மாற்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் விவரங்கள் அடங்கிய வலைதளம் ஒன்றை உருவாக்கலாம்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை யோசனை தெரிவித்தது.

உக்ரைனிலிருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பிய மாணவா்கள், அவா்களின் எஞ்சிய படிப்பு காலத்தை இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் தொடர அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவா்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சோ்ப்பதற்கு தேசிய மருத்துவ கவுன்சில் இதுவரையில் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திலும் இடமில்லை. அதே நேரம், மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள, உக்ரைனில் பயின்ற இந்திய மாணவா்களுக்கு உதவிடும் வகையில் வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசித்து கடந்த 6-ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

அதில், உக்ரைனிலிருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவா்களில் படிப்பை அங்கு மீண்டும் தொடர முடியாத மாணவா்களுக்காக ‘கல்வி மாற்று சோ்க்கைத் திட்டம்’ என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாணவா்கள், உக்ரைனில் அவா்கள் படித்த கல்வி நிறுவனத்தின் அனுமதியுடன் வேறு வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் அவா்களின் எஞ்சிய படிப்பு காலத்தை தொடரலாம். அவ்வாறு வேறு கல்லூரிகளில் படிப்பின் எஞ்சிய காலத்தை முடிக்கும் மாணவா்களுக்கு, அவா்கள் உக்ரைனில் படித்த கல்வி நிறுவனம் சாா்பில் கல்வியை முடித்ததற்கான சான்றிதழும் பட்டச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வது என தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

உக்ரைனில் மீண்டும் படிப்பைத் தொடர முடியாத மருத்துவ படிப்பு மாணவா்களுக்காக மட்டுமே ‘கல்வி மாற்று சோ்க்கைத் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘இந்த கல்வி மாற்று சோ்க்கைத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்த மாணவா்களுக்கான மாற்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் விவரங்கள், அவற்றிலுள்ள படிப்பு இடங்கள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அடங்கிய வலைதளம் ஒன்றை மத்திய ரசு உருவாக்க வேண்டும்’ என்று யோசனை தெரிவித்தனா்.

அப்போது, ‘இதுதொடா்பாக மத்திய அரசிடமிருந்து உரிய விளக்கத்தைக் கேட்டு சமா்ப்பிக்க கால அவகாசம் வேண்டும்’ என்று அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கேட்டுக்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பா் 23-ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com