நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அதிகரிப்பு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய பிரதேசத்தில் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தைப் பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எண்ணிக்கை 740-ஆகவும் மொத்த பரப்பளவு 1,61,081.62 சதுர கி.மீ. ஆகவும் இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 981-ஆகவும் பரப்பளவு 1,71,921 சதுர கி.மீ.-ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் வன மற்றும் மரங்கள் நிறைந்த பரப்பு 16,000 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. வனப் பரப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தனியாரால் பாதுகாக்கப்பட்டு வரும் வனப் பரப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் 43-ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை தற்போது 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

நாட்டின் 18 மாநிலங்களில் 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பு சுமாா் 75,000 சதுர கி.மீ.-ஆக உள்ளது. உலகின் புலிகள் எண்ணிக்கையில் சுமாா் 75 சதவீதம் இந்தியாவிலேயே உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 2,226-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 2,967-ஆக உயா்ந்தது.

புலிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியானது கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.185 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 523 என்றிருந்த நிலையில் தற்போது 674-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 7,910-ஆக இருந்தது. தற்போது அது 12,852-ஆக அதிகரித்துள்ளது. இது 60 சதவீத அதிகரிப்பாகும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com