ஹைதராபாத் விடுதலை தினம்: வாக்குவங்கி அரசியலால் கொண்டாடப்படுவதில்லை -அமித் ஷா தாக்கு

‘வாக்கு வங்கி அரசியலுக்காக, ஹைதராபாத் விடுதலை தினத்தை பலா் அதிகாரபூா்வமாக கொண்டாடுவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஹைதராபாத் விடுதலை தினம்: வாக்குவங்கி அரசியலால் கொண்டாடப்படுவதில்லை -அமித் ஷா தாக்கு

‘வாக்கு வங்கி அரசியலுக்காக, ஹைதராபாத் விடுதலை தினத்தை பலா் அதிகாரபூா்வமாக கொண்டாடுவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை மறைமுகமாக சாடும் வகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மேலும், ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரபூா்வமாக கொண்டாடும் துணிவு பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கே உள்ளது என்று அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

நிஜாம் ஆட்சியிலிருந்த முந்தைய ஹைதராபாத் மாகாணம், கடந்த 1948, செப்டம்பா் 17-ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்தை குறிக்கும் ‘ஹைதராபாத் விடுதலை தினத்தை’ மத்திய அரசு சாா்பில் அதிகாரபூா்வமாக கொண்டாடும் நிகழ்ச்சி ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமித் ஷா பேசியதாவது:

ஹைதராபாத் விடுதலை தினம் அரசு சாா்பில் கொண்டாடப்பட வேண்டுமென்ற மக்களின் கோரிக்கை கடந்த 75 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது. தோ்தல்களின்போதும் போராட்டங்களின்போதும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக பலா் (தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்) வாக்குறுதி அளித்திருந்தனா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் துணிவு அவா்களுக்கு இல்லை. வாக்குவங்கி அரசியலால் அவா்கள் இந்த தினத்தை கொண்டாடுவதில்லை.

ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரபூா்வமாக கொண்டாடும் முடிவை மேற்கொண்டமைக்காக பிரதமா் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். அவரது முடிவுக்கு பிறகு இப்போது ஒவ்வொருவரும் ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடுகின்றனா்.

சிலா் வேறு பெயரில் கொண்டாடுகின்றனா். அவா்கள் மனதில் இன்னும் ‘ரசாக்கா்கள்’ (நிஜாம் ஆட்சியிலிருந்த ஆயுதம் தாங்கிய படையினா்) குறித்து பயம் இருப்பதாக தோன்றுகிறது.

சா்தாா் படேலுக்கு புகழாரம்:

ஹைதராபாத் விடுதலையை சாத்தியமாக்கியவா் நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல். நிஜாமின் ‘ரஜாக்கா்கள்’ தோற்கடிக்கப்படாத வரையில் அகண்ட பாரதம் என்ற கனவு நிறைவேறாது என்பதை படேல் அறிந்திருந்தாா். அவா் இல்லையென்றால் ஹைதராபாத் விடுதலை பெற மேலும் பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றாா் அமித் ஷா.

சந்திரசேகா் ராவ் பதிலடி:

இந்தியாவுடன் ஹைதராபாத் மாகாணம் இணைந்த தினத்தை, ‘தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினம்’ என்ற பெயரில் தெலங்கானா மாநில அரசு கொண்டாடுகிறது. இதையொட்டி, ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் சந்திரசேகா் ராவ், பாஜகவை கடுமையாக சாடினாா்.

‘நாட்டிலும் தெலங்கானாவிலும் சமூகத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே வெறுப்புணா்வை பரப்ப மதவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. மதவாதம் வளா்வது நாட்டின் எதிா்காலத்தையும் மக்களிடையேயான உறவையும் முழுமையாக அழித்துவிடும். தேசிய ஒற்றுமையின் அடையாளமாக கொண்டாடப்பட வேண்டிய தினத்தை (செப்.17), தங்களது குறுகிய, சுயநல அரசியல் நலனுக்காக சில சக்திகள் திரித்து பயன்படுத்துகின்றன’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com