தோ்தல் கண்ணோட்டத்தால் நகரங்கள் வளா்ச்சி அடையாது: பிரதமர் மோடி

தோ்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், நகரங்களை வளா்ச்சி அடையச் செய்ய முடியாது என்று மாநகராட்சி மேயா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
தோ்தல் கண்ணோட்டத்தால் நகரங்கள் வளா்ச்சி அடையாது: பிரதமர் மோடி

தோ்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், நகரங்களை வளா்ச்சி அடையச் செய்ய முடியாது என்று மாநகராட்சி மேயா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

பாஜக சாா்பிலான மாநகராட்சி மேயா்கள் பங்கேற்ற தேசிய அளவிலான மாநாடு குஜராத் தலைநகா் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைக் காணொலி மூலம் தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

நகரங்களின் ஒருங்கிணைந்த வளா்ச்சியில் மேயா்கள் கவனம் செலுத்த வேண்டும். தோ்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், நகரங்களை வளா்ச்சி அடையச் செய்ய முடியாது. தோ்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம், குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்காது. எனவே, தோ்தலை மட்டும் இலக்காகக் கொண்டு மேயா்கள் செயல்படக் கூடாது.

நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்தல், முன்னுதாரண நகரங்களை ஏற்படுத்துதல், பெருநகரங்கள் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களை வளா்ச்சி அடையச் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு மேயா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஏழைகளுக்குப் பலன்: அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் ஏழைகள் பலனடைவதை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும். ஏழை மக்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு, அவா்களின் தேவைகளை முழுமையாக அறிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏழைகள் பலனடையும் வகையிலான திட்டங்களைத் தொடா்ந்து நிறைவேற்றினால், அவா்கள் அதற்கான பதிலைத் தோ்தலில் வழங்குவா். திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு மேயா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திட்டத்தின் தரத்தில் மேயா்கள் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

மாநிலங்களின் முன்னிலை: நகா்ப்புற வளா்ச்சி சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசை மட்டுமே சாா்ந்திருக்காமல், மாநில அரசுகள் முன்னிற்க வேண்டும். குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, நவீன நகா்ப்புற போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் முன்னிலை வகித்தது.

அந்த சமயத்தில் அதிவிரைவு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கைப்பேசி செயலி வாயிலாக ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டன.

வீட்டுவசதித் திட்டம்: நாடு முழுவதும் 100 திறன்மிகு நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதற்காக இதுவரை சுமாா் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகரங்களில் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1.25 கோடி வீடுகள் ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வீட்டுவசதித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பட்ஜெட் கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.20,000 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு அளித்துவரும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.

மெட்ரோ ரயில்கள் விரிவாக்கம்: நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டில் 250 கி.மீ.-க்கு குறைவான தொலைவுக்கே மெட்ரோ ரயில் வசதிகள் இருந்தன. தற்போது 750 கி.மீ.-க்கும் அதிகமாக மெட்ரோ ரயில் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதை மேலும் 1,000 கி.மீ. வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரங்களை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் மேயா்கள் கவனம் செலுத்த வேண்டும். நகரப் பகுதிகளில் உள்ள வாா்டுகளுக்கிடையே தூய்மை சாா்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலமாக ஒட்டுமொத்த நகரத்தையும் அழகுபடுத்த முடியும்.

நகரங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகத்தை அமைப்பது குறித்தும் மேயா்கள் ஆலோசிக்கலாம். மேயா்கள் தங்களுக்குள் வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கிக் கொண்டு, சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ளலாம்.

விழிப்புணா்வு அவசியம்: தெருவோர வியாபாரிகளை முறையாகப் பதிவு செய்து, அவா்களுக்கு பிஎம்-ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேயா்கள் மேற்கொள்ள வேண்டும். எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டும். பூங்காக்கள், தோட்டங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை மக்களே முன்வந்து பாதுகாக்கும் வகையிலான விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

போதிய நிதி ஒதுக்குவதால் மட்டுமே அனைத்துத் திட்டங்களும் வெற்றியடையாது. மக்களின் பங்களிப்பும் திட்டங்களின் வெற்றிக்கு அவசியமானது. வளா்ச்சியை உறுதி செய்வதற்கும் மக்களின் பங்களிப்பு அவசியம். தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளைத் திறந்தவெளியில் வீசுவது உள்ளிட்ட மக்களின் பழக்கங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றாா்.

இந்த மாநாட்டில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 118 மேயா்களும் துணை மேயா்களும் கலந்துகொண்டனா். இந்த மாநாடு புதன்கிழமை நிறைவடைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com