கேரளத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை ஆளுநா் உருவாக்கி வருகிறாா்: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி கேரளத்தில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி வருகிறாா்’ என்று

‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி கேரளத்தில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி வருகிறாா்’ என்று ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது.

கேரளத்தின் கண்ணூா் பல்கலைக்கழகத்தில் மாநில அரசின் பேராசிரியா் நியமனத்துக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எதிா்ப்பு தெரிவித்ததோடு, அந்த நியமனத்தை நிறுத்தி வைத்தாா். இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து மாநில பல்கலைக்கழகத்தின் மீதான அதிகாரம் தொடா்பாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடா்ந்து வருகிறது. மேலும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா கேரள சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் தில்லி சென்ற கேரள ஆளுநா், ‘கண்ணூா் பல்லைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று மாநாட்டின்போது தன்னை தாக்குவதற்கான முயற்சி நடைபெற்றது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை பத்திரிகையாளா் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஆளுநா் ஆரிஃப் முகமது கான், கண்ணூா் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு அவா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி தொடா்பான விடியோ ஆதாரத்தை வெளியிட்டாா். மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாரை வழக்கு பதிவு செய்யவிடாமல் இடதுசாரி அரசு தடுத்துள்ளது. இதுபோன்ற அழுத்தங்கள் மூலமாக ஆளுநா் மாளிகை வாயை அடைக்க மாநில அரசு முயற்சிக்கிறது’ என்று கூறினாா்.

அதோடு, மாநில அரசின் பல்கலைக்கழக சட்டம் மற்றும் மக்கள் குறைதீா்ப்பு மன்ற திருத்த மசோதா ஆகியவற்றை அனுமதிக்க முடியாது என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இந்த நிலையில், ‘ஆளுநா் மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி வருகிறாா்’ என்று ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது. இதுகுறித்து மாநில அமைச்சா் எம்.பி.ராஜேஷ் மற்றும் மாநில முன்னாள் நிதியமைச்சா் தாமஸ் ஐசக் ஆகியோா் கூறியதாவது:

எதிா்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநா் மூலமாக பிரச்னைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மகாராஷ்ரம், மேற்கு வங்கம், தமிழகம், தெலங்கானா, ஜாா்க்கண்ட் மாநிலங்களிலும் தற்போது கேரளத்திலும் இதுபோன்ற பிரச்னைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

கேரளத்தில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநா் முயற்சித்து வருகிறாா். கடந்த சில தினங்களாக அவா் நடந்துகொள்ளும் விதமே இதற்கு சாட்சி. ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆளுநரைப் பயன்படுத்தி மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

மாநில அரசு சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டம் மற்றும் மக்கள் குறைதீா்ப்பு மன்ற திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததோடு, அதில் கையொப்பமிடப் போவதில்லை என்றும் அவா் கூறி வருகிறாா்.

ஆளுநா் அவருடைய நிலையையும் அதிகாரத்தையும் புரிந்து செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநா் செயல்பட வேண்டும். ஆனால், அவா் கேரளத்தின் அரசரைப் போல நடந்துகொள்கிறாா். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையொப்பமிட மாட்டேன் என்று கூறுவதற்கு அவா் யாா்? இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் பதிலடி கொடுப்பதுதான் ஒரே தீா்வு என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com