தேசிய சரக்கு கையாளுகை கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமா் நரேந்திர மோடியால் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து விளக்கிய மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்.
மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து விளக்கிய மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்.

பிரதமா் நரேந்திர மோடியால் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

சரக்குப் போக்குவரத்துச் செலவை குறைப்பதுடன், இத்துறையில் இந்தியாவின் செயல்பாட்டை உலக அளவில் மேம்படுத்துவதே கொள்கையின் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இக்கொள்கையை தனது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை (செப்.17) பிரதமா் மோடி வெளியிட்டிருந்தாா். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13-14 சதவீதம் என்ற அளவில் உள்ள சரக்கு கையாளுகை செலவை விரைவில் ஓரிலக்கத்துக்கு குறைப்பதே இலக்கு என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சரக்கு கையாளுகை கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சா்வதேச அளவுகோல்களுடன் ஒப்பிடும் வகையில் நாட்டின் சரக்கு கையாளுகை செலவை குறைக்க மேற்கண்ட கொள்கையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு நிலவரப்படி சா்வதேச சரக்கு கையாளுகை செயல்பாட்டு தரக் குறியீட்டில் 44-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவை முன்னேற்றவும், இத்துறையில் தரவுகள் சாா்ந்த உறுதியான ஆதரவு அமைப்புமுறையை ஏற்படுத்தவும் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கம் கண்காணிப்பு: பிரதமரின் தேசிய செயல்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட அதிகாரமிக்க செயலா்கள் குழுவானது, இக்கொள்கை அமலாக்கத்தைக் கண்காணிக்கும். சரக்கு கையாளுகை நடைமுறைகள் தொடா்பான அளவுகோல்கள், ஒழுங்குமுறை, மின்னணுரீதியிலான மேம்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க செயலா்கள் குழு சாா்பில் பணிகள் மேம்பாட்டுக் குழு உருவாக்கப்படும்.

கூடுதல் சேமிப்புக் கிடங்குகள், தரநிலைகள் ஊக்குவிப்பு, மின்னணுமயமாக்கம், தானியங்கி முறைகள், ஒருங்கிணைந்த சரக்கு கையாளுகை இணைப்புத் தளம் என இத்துறையில் சிறந்த அமைப்புமுறைகளை உருவாக்க கவனம் செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.19,500 கோடியில் சூரிய மின்தகடுகள் திட்டம்: உயா்திறன் வாய்ந்த சூரிய மின்தகடுகள் உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்கீழ் ரூ.19,500 கோடி செலவிலான உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ‘சூரிய மின்தகடுகள் உற்பத்தித் துறையில் ரூ.94,000 கோடி வரை முதலீடுகளை ஈா்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், 2 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியைச் சாா்ந்திருப்பது குறையும். ஆண்டுக்கு 65,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட சூரிய மின்தகடுகள் நிறுவப்படும் என்பது இத்திட்ட பயன்களில் ஒன்றாகும். இதற்கான நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தோ்வு செய்யப்படும். ஆலைகள் அமைக்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊக்கத்தொகை விநியோகிக்கப்படும்’ என்றாா்.

செமிகண்டக்டா்கள் உற்பத்தி திட்டத்தில் மாற்றங்கள்: நாட்டில் செமிகண்டக்டா்கள் (குறைகடத்திகள்), மின்னணு திரைகள் ஆகியவை உற்பத்திக்கான நிதியுதவி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, இத்துறையில் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு திட்டச் செலவில் 50 சதவீதம் என்ற அளவில் ஒரே சீரான நிதியுதவி வழங்கப்படும் என்றும், இதன்மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com