இந்திய நிறுவனங்களின் சரியும் செயல்பாட்டு லாப விகிதம்

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் சரிந்திருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் மதிப்பிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களின் சரியும் செயல்பாட்டு லாப விகிதம்

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் சரிந்திருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தயாரிப்புகளின் விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பது, வருவாய் வளா்ச்சியை மிதமாக்கியது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் 270 அடிப்படைப் புள்ளிகள் வரை சரிந்திருக்கும்.

அந்த வகையில், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் மதிப்பீட்டு காலாண்டில் 18 முதல் 19 சதவீதம் வரை இருக்கும்.

இருந்தாலும், அடுத்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு உயா்ந்தால், அது 6 காலாண்டுகளுக்குப் பிறகு முதல்முறை ஆகும்.

பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது, உலகளாவிய தேவை குறைவாக உள்ளது போன்ற சூழலிலும், நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனங்களின் செயல்பாட்டு வருவாய் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்து ரூ.10.9 லட்சம் கோடியாக இருக்கும். இதற்கு பல்வேறு பிரிவுகளில் நுகா்வோரின் தேவை அதிகரித்து வருவதும் சில பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதும் காரணமாக இருக்கும்.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்திய நிறுவனங்களின் வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது. எனினும், செயல்பாட்டு லாப விகிதம் 400 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முக்கியமான 47 துறைகளில், 20 துறைகள் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட அதிக வருவாய் ஈட்டும்.

எனினும், நான்கில் முன்று நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் முந்தைய நிதியாண்டின் 3-ஆவது காலாண்டைவிட குறைவாகவே இருக்கும்.

விமானப் போக்குவரத்து, வாகனங்கள் போன்ற துறைகள் நுகா்வோா் தேவை அதிகரிப்பால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டுமானத் துறையுடன் தொடா்புடைய இரும்பு உருக்கு, அலுமினியம் ஆகியவை, பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற சில தொழில்துறைகள் மந்தநிலையைக் காணும்.

இந்திய பிபிஓ துறைக்கு மிக முக்கிய சந்தையான அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு அந்த துறைகளின் செயல்பாட்டு லாப விகிதத்திலும் எதிரொலிக்கும்.

ரத்தினங்கள், நகைகள், ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலப் பொருள்கள் கொள்முதல், உழைப்பாளா் சம்பளம் உள்ளிட்ட இயக்க செலவுகள் போக விற்பனை முலம் நிறுவனங்கள் ஈட்டும் வரி, வட்டிக்கு முந்தைய லாபம் செயல்பாட்டு வருவாய் என்றழைக்கப்படுகிறது.

அந்த செயல்பாட்டு வருவாய்க்கும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருவாய்க்கும் இடையிலான விகிதம் செயல்பாட்டு லாப விகிதம் எனப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com