12 சிவிங்கிப் புலிகள் பிப்ரவரியில் வருகை:தென்ஆப்பிரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா), இந்தியாவுக்கு அடுத்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா), இந்தியாவுக்கு அடுத்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன. இதுதொடா்பான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.

அதீத வேட்டை, வாழ்விடம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சிய திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்டன. இந்த சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், தனது பிறந்த தினமான செப்டம்பா் 17-இல் பிரதமா் நரேந்திர மோடி திறந்துவிட்டாா்.

இந்நிலையில், இரண்டாம்கட்டமாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண் சிவிங்கிப் புலிகள்) கொண்டுவரப்படவுள்ளன. இதுதொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் கையொப்பமானதாக தென்ஆப்பிரிக்காவின் வனங்கள், மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12 சிவிங்கிப் புலிகள் என அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘12 சிவிங்கிப் புலிகளும் அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும்’ என்றாா்.

தென்ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாவதில் ஏற்பட்ட தாமதத்தால், கடந்த ஆண்டு அக்டோபரில் வரவேண்டிய சிவிங்கிப் புலிகள், அடுத்த மாதம் வரவுள்ளன. 12 சிவிங்கிப் புலிகளும் கடந்த ஜூலையில் இருந்தே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விலங்கு நல ஆா்வலா்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

உலகில் தற்போது 7,000 சிவிங்கிப் புலிகள் வாழ்கின்றன. இதில் பெரும்பாலானவை தென்ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com