
கோப்புப்படம்
அமராவதி: அமெரிக்காவில், முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த 24 வயது மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
படித்துக் கொண்டே, ஓஹிவோவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சையேஷ் வீரா என்பவர், வேலையில் இருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. படுகாயத்துடன் காவலர்களால் மீட்கப்பட்ட சையஷ் வீரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்1பி விசாவில் வந்து முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்த வீரா, பட்டம் பெற இன்னும் 10 நாள்களே இருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகவும், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு அவரது நண்பர் பணம் திரட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது தந்தையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த வீரா, குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா வந்து உயர்கல்வி பயின்று வந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நேரிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...