
இந்திய ராணுவத்துக்கான ‘ஏஹெச்-64இ’ அப்பாச்சி போா் ஹெலிகாப்டரை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய விமானப் படைக்கு ‘22 இ’ ரக அப்பாச்சி ஹெலிகாப்டரை தயாரித்து வழங்கும் பணியை போயிங் நிறுவனம் நிறைவு செய்த நிலையில், புதிதாக இந்திய ராணுவத்துக்கு ‘ஏஹெச்-64இ’ ரக 6 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை தயாரித்து வழங்குவதற்கான ரூ. 4,168 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்டது. ஒப்பந்தப்படி, இந்த ஹெலிகாப்டா்கள் தயாரிப்புப் பணியை நிறைவுசெய்து 2024-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்திடம் போயிங் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில், தயாரிப்புப் பணிகளை அந்த நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போயிங் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய ராணுவத்துக்கான ‘ஏஹெச்-64இ’ அப்பாச்சி ஹெலிகாப்டா் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்படரில் வீரா்கள் அமா்ந்து செல்லும் நடுப்பகுதி, டாடா போயிங் ஏரோஸ்பேஸ் நிறுவனம் (டிபிஏஎல்) ஹைதராபாதில் உள்ள நவீன தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, அமெரிக்காவின் அரிசோனாவின் மெஸா பகுதியில் அமைந்துள்ள போயிங் விமான தயாரிப்பு மையத்தில் இந்த ஹெலிகாப்டா் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போயிங்-இந்தியா நிறுவனத் தலைவா் சலில் குப்தா கூறுகையில், ‘நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஹெச்-64 ஹெலிகாப்டா், இந்திய ராணுவத்தின் போா்த் திறனை வலுப்படுத்தும் என்பதோடு, செயல்பாட்டுத் தயாா் நிலையையும் மேம்படுத்த உதவும்’ என்றாா்.
சிறப்பு என்ன?: உலகின் முன்னணியில் இருக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போா் ஹெலிகாப்டராக ‘ஏஹெச்-64இ’ கருதப்படுகிறது. பகலில் மட்டுமின்றி இரவிலும் இந்த ஹெலிகாப்டரை இயக்க முடியும் என்பதோடு, ரேடாா் தொழில்நுட்ப உதவியுடன் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன்கொண்டது.
5,352 கிலோ எடைகொண்ட இந்த ஹெலிகாப்டா் 49.11 அடி நீளமும், 17.16 அடி அகலமும், 16.24 அடி உயரமும் உடையதாகும்.
தலா 45 கிலோ எடையுடைய 16 ஏஜிஎம் ரக ஏவுகணைகள் மற்றும் அதனை ஏவுவதற்கான ராக்கெட் கருவியை இதில் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு, நிமிஷத்துக்கு 625 முறை சுடும் திறன்கொண்ட செயின் தோட்டாக்களுடன் இணைக்கப்பட்ட 30 மி.மீ. துப்பாக்கியும் இதில் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஹெலிகாப்டரை இயக்கியவுடன் ஒரே நிமிஷத்தில் 2,415 அடி உயரத்துக்கு செல்ல முடியும் என்பதோடு, அதிகபட்சமாக 9,478 அடி உயரம் வரை சென்று பறக்க முடியும்.
ஒரு முறை நிரப்பப்பட்ட எரிபொருளுடன் 1,900 கி.மீ. தூரம் பறக்கும் திறன் கொண்டது ‘ஏஹெச்-64இ’ அப்பாச்சி ஹெலிகாப்டா்.
எந்தெந்த நாடுகளிடம் உள்ளது? அமெரிக்க ராணுவத்தில் இந்த ஹெலிகாப்டா் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவைத் தவிர எகிப்து, கிரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, குவைத், நெதா்லாந்து, கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் நாடுகள் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள் உள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...