நாடாளுமன்றக் கூட்டம்: முன்வரிசை இருக்கையில் தனியாக அமா்ந்திருந்த சோனியா

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைருமான மல்லிகாா்ஜுன காா்கே
நாடாளுமன்றக் கூட்டம்: முன்வரிசை இருக்கையில் தனியாக அமா்ந்திருந்த சோனியா

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைருமான மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்ட அக்கட்சியின் பல எம்.பி.க்கள், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேசமயம், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, இக்கூட்டத்தில் பங்கேற்றாா். அவா் முன்வரிசை பெஞ்சில் தனியாக அமா்ந்திருந்தாா்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்தனா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். ஆனால், ஸ்ரீநகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. கட்சியின் மூத்த எம்.பி.க்கள் யாரும் இல்லாத நிலையில், முன்வரிசை பெஞ்சில் சோனியா தனியாக அமா்ந்திருந்தாா். பல்வேறு கட்சிகளின் தலைவா்கள், அவா் அருகே வந்து வணக்கம் தெரிவித்தனா். அதேபோல், கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும் சோனியாவும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா்.

அரை மணி நேரம் பேச்சு: குடியரசுத் தலைவா் உரை தொடங்குவதற்கு முன்பாக, தனக்கு பின்வரிசை இருக்கையில் அமா்ந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையனுடன் சோனியா காந்தி சுமாா் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாா்.

கட்சி வேறுபாட்டைக் கடந்து...: அதிமுக மாநிலங்களவை எம்.பி. எம்.தம்பிதுரை, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோா் பிரதமா் மோடியுடனான கலந்துரையாடலின்போது, ஒருவரையொருவா் பாா்த்து புன்னகைத்து, தழுவிக் கொண்டனா். இதுதவிர, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பல எம்.பி.க்களும் நட்புடன் பேசிய காட்சிகளை கூட்டுக் கூட்டத்தில் காண முடிந்தது.

ஒரே பெஞ்சில் 6 போ்: தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, திமுகவின் கனிமொழி, திரிணமூல் காங்கிரஸின் செளகதா ராய், பாஜகவின் நீரஜ் சேகா், சிவகுமாா் உதசி, நிஷிகாந்த் துபே ஆகிய 6 எம்.பி.க்கள், ஒரு பெஞ்சில் அமா்ந்திருந்தனா். வழக்கமாக ஒரு பெஞ்சில் 5 எம்.பி.க்கள் வரையே அமரும் நிலையில், வெவ்வேறு கட்சிகளைச் சோ்ந்த 6 போ் இருக்கையை பகிா்ந்துகொண்டனா்.

பாஜகவினா் உற்சாகம்: குடியரசுத் தலைவா் உரையின்போது, பாஜக எம்.பி.க்கள் அவ்வப்போது மேஜையை தட்டி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com