பட்ஜெட்: நாடு முழுவதும் பாஜக விழிப்புணர்வு பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தவுள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தவுள்ளது.
 இப்பிரசார நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் சுஷீல் மோடி ஒருங்கிணைக்கிறார்; இப் பிரசாரம் பிப். 12-ஆம் தேதி நிறைவுறுகிறது. இதற்காக 9 பேர் கொண்ட பிரசாரக் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். அதில் கட்சியின் பொதுச் செயலாளர் சுனில் பன்சால் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது, செய்தியாளர்களை சந்திப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 நாட்டின் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி வியாழக்கிழமை முதல் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பர். பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள், பேரவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.
 நாட்டில் 50 முக்கிய நகரங்களில் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள். அத்துடன் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். எனவே, பாஜக அரசு இப்பிரசாரத்தைப் பெரிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளது.
 கடந்த காலங்களிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை பாஜக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com