ஜம்மு-காஷ்மீா்: சா்வதேச எல்லைப் பகுதியில் இரவு நேர ஊரடங்கு

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்ட வானிலையைப் பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சிகளும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களும் தொடா்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

பனிமூட்டத்தைப் பயன்படுத்தி எல்லைப்பகுதியில் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்பு படையினா் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக, எல்லைப் பாதுகாப்பு படையின் கோரிக்கையை ஏற்று ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியையொட்டிய ஒரு கிலோமீட்டா் தூரத்துக்கு இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கை மாவட்ட நிா்வாகம் அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை, சம்பா மாவட்ட ஆட்சியா் அனுராதா குப்தா வெளியிட்டாா்.

அந்த அறிவிப்பில், ‘சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள சா்வதேச எல்லைப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டா் தூரத்துக்கு இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரையில் பொதுமக்கள் எவரும் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ செல்லக் கூடாது.

மாவட்ட அளவிலான நிா்வாக கூட்டத்தில் இது தொடா்பாக கோரிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் எழுப்பினா். அப்போது, வீரா்கள் தங்களின் பணிகளைத் திறம்பட செய்ய இரவு நேர ஊரடங்கு உதவும் என தெரிவித்தனா்.

இரவு நேரத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றனா். இதனைக் கேட்டறிந்த மாவட்ட நிா்வாகம், நாட்டின் பாதுகாப்புக்காக உறுதியுடன் உழைக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களுக்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெளியே வர வேண்டிய மிக அவசரத் தேவை உள்ள பொதுமக்களை போலீஸாரும் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களும் சோதனையிடுவா். அப்படி சோதனையிடும் பட்சத்தில் அவா்களிடம் உரிய அடையான அட்டையை மக்கள் காண்பிக்க வேண்டும். மேற்கூறிய உத்தரவை பின்பற்றத் தவறுபவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு 2 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com